tamilnadu

img

‘வரவிருக்கும் நாட்கள் கடினமானவை’தான் சவால்களை சந்திக்க காங். தயாராக இருக்கிறது..

புதுதில்லி:
நாட்டின் நன்மதிப்பைப் பாதுகாக்க நான் பெற்ற எதையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். இந்த நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டேன் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பின், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ரேபரேலி எம்.பி.யுமான சோனியா காந்தி தனது தொகுதி மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார்.“இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் என் மீது நம்பிக்கை வைத்து வெற்றிபெற வைத்ததைப் போலவே இம்முறையும் என்னை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். அதற்காக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் காங்கிரசின் பாரம்பரிய தொகுதி என்பதாலும், தாம் போட்டியிட்டதாலும் எனக்கு எதிராக வேட்பாளர்கள் யாரையும் களமிறக்காத சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், சுவாபிமான் தளம் கட்சிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

எனது குடும்பம் ரேபரேலி மக்கள்தான், எனது சொத்தும் நீங்கள் தான். எனக்கு தேவையான சக்தியை உங்களிடமிருந்துதான் நான் பெற்று வருகிறேன். தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளால், வரும் காலங்கள் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் சோதனையான காலகட்டம் என்பதை உணர்ந்துள்ளேன். ஆனால் இந்த சோதனைகளையெல்லாம் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் மூலம் வென்று விட முடியும் என உறுதியாக நம்புகிறேன்” என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்