tamilnadu

img

மின்னணு எந்திரங்களின் சிப்புகளை மோசடியாக மாற்றியமைத்திட முடியும்

புதுதில்லி:
தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்களின் சிப்புகளை மாற்றியமைத்து, தங்களுக்குத் தேவைப்படும் வேட்பாளர்களுக்கு வாக்களித்ததுபோன்று மோசடி செய்திட முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எண்ணற்றவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து தலைநகர் புதுதில்லியில் உள்ள பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா வளாகத்தில் வியாழன் அன்று பல சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் ‘மின்னணு எந்திரங்கள் எதிர்ப்பு மக்கள் இயக்கம் (EVM Virodhi Rashtriya Jan Andolan) என்னும் அமைப்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. அப்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் மாணவர் சங்கத் தலைவர்களும் பங்கேற்றார்கள்.

இவர்கள் அனைவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டுத் தாளில் முத்திரை குத்தி வாக்குப் பெட்டிகளில் பதிவுசெய்திடும் பழைய முறையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் அதன் மூலம் “ஜனநாயகத்தை மீண்டும் மீட்டெடுத்திட வேண்டும்” என்றும் கோரினார்கள்.செய்தியாளர் சந்திப்பின்போது உரையாற்றிய செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரிப் பேராசிரியர் நந்திதா நாராயண், “எந்தவொரு கட்சியும் அது எவ்வளவு வலிமைமிகுந்ததாக இருந்தபோதிலும் குடிமக்களின் குரலை நசுக்கிட முடியாது,” என்று கூறினார்.

“தேர்தலில் எந்த முறையைப் பயன்படுத்துவது என்பது நாட்டின் கருத்தொற்றுமையின் அடிப்படையில் அமைந்திட வேண்டும். 100 சதவீத வாக்கு எண்ணிக்கை நடைபெறாதபோது, விவிபேட் உபயோகிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? மின்னணு எந்திரங்களுக்கு எதிராக மக்களின் குரல்கள் ஒலிக்கத்தொடங்கி வெகுகாலமாகிவிட்டன.  தேர்தலில் வெளிப்படைத்தன்மையை மெய்ப்பித்திட மீண்டும் வாக்குத்தாள்களில் முத்திரை குத்தி வாக்குப் பெட்டிகளில் போடும் முறைக்குத் திரும்பிட வேண்டும். இது இப்போது மிகவும் முக்கியமாக மாறியிருக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
“தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்களிலிருந்து, மின்னணு வாக்கு எந்திரங்களின் சிப்புகளை மாற்றியமைக்க முடியும் என்று தெரிய வந்தது என்றும் எனவே அதன்மூலம் வாக்குகள் பெற்ற வேட்பாளர்களில் தங்களுக்குச் சாதகமானவர் பெயரை மோசடியாக சேர்த்திட முடியும்,” என்றும் ஆர்வலர்கள் விளக்கினார்கள்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் தலைவரான என். சாய் பாலாஜி,  “தேர்தல் ஆணையமானது, மின்னணு வாக்கு எந்திரங்களில் பயன்படுத்தப்படும் சிப்புகள் ஒரேதடவை மட்டுமே செயல்படக்கூடிய விதத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன என்று கூறிக்கொண்டிருக்கிறது. எனினும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலோ அதனை மாற்றியமைத்திட முடியும் என்று பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறது.  இது தொடர்பாக கேள்வி எழுப்பினால் தேர்தல் ஆணையம் பதில் சொல்ல மறுக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

திரைப்படத் தயாரிப்பாளர் கௌஹார் ராஸா, ”மின்னணு எந்திரங்கள் அனைத்தையுமே மோசடியாக மாற்றியமைத்திட முடியும். இதில் மின்னணு வாக்கு எந்திரம் மட்டும் விதிவிலக்கல்ல,” என்று தெரிவித்தார். “இது வெறும் தொழில்நுட்பப் பிரச்சனை என்று இனியும் கூறிக்கொண்டிருக்க முடியாது. இது ஒரு அரசியல் பிரச்சனையாக மாறிவிட்டது. நாட்டின் குடிமக்கள் மின்னணு எந்திரங்களுக்கு எதிராகத் தங்கள் குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்.  மக்களின் குரலை அரசியல் கட்சிகளிடமும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பாக திறந்த மடல் ஒன்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இச்சந்திப்பின்போது அனுப்பப்பட்டது. சமூக ஆர்வலர் சப்னம் ஹஷ்மி கூறுகையில், “2019 தேர்தல், மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்ததன் மூலம் எளிதாக வெற்றிபெற்றுவிட்டார்கள். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தப்படக்கூடாது. நம் ஜனநாயகம் காப்பாற்றப்பட  வேண்டியது மிகவும் அவசியம்,” என்றார்.  (ந.நி.)