tamilnadu

img

மத்திய அரசின் கடன் சுமை ரூ.88 லட்சம் கோடி ஆனது

புதுதில்லி:
மத்திய அரசின் கடன், 88 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகமே புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.கடந்த 2018-19 நிதியாண்டின் இறுதிக் காலாண்டின் (ஜனவரி முதல்மார்ச்) போது, மத்திய அரசுக்கு இருந்த கடன், 84 லட்சத்து 68 ஆயிரம்கோடியாகும். ஆனால், 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் (ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள்)- அதாவது மூன்றே மாதங்களுக்குள் இந்தக் கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.நடப்பு 2019-20 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு அறிக்கையை மத்தியநிதியமைச்சகம் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது. அதிலேயே இந்த விவரங்கள் இடம்பெற் றுள்ளன.மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சியை விட்டு இறங்கிய பொழுது, கடந்த 2014 ஜூனில்,இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ. 54 லட்சத்து 90 ஆயிரத்து763 கோடி என்ற அளவில் இருந்தது.

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2018 செப்டம்பர் வரையிலான நான்கரை ஆண்டுகளில், இந்த கடன்தொகை ரூ. 82 லட்சத்து3 ஆயிரத்து 253 கோடியாக அதிகரித்தது. இதுதான் தற்போது 2019 ஜூன் வரையிலான காலத்திற்குள் ரூ. 88 லட்சத்து 18 ஆயிரம் கோடியாகஉயர்ந்துள்ளது.நாடு விடுதலை அடைந்ததில் இருந்து, சுமார் 67 ஆண்டுகளில் இந்தியா பெற்ற மொத்தக் கடன் ரூ. 54 லட்சம் கோடி என்றால், மோடி ஐந்தே கால் ஆண்டுகளில் மட்டும் 34 லட்சம் கோடி ரூபாய்களை கடனாகவாங்கி, இந்திய அரசின் கடன் சுமையை உயர்த்தியுள்ளார்.நடப்பு நிதியாண்டின் ஜூன் வரையிலான காலாண்டில், பண மேலாண்மை ரசீது (Cash Management Product - CMP) மூலம்குறுகிய கால கடன் எதையும் மத்திய அரசு பெறவில்லை. எனினும், இந்தகாலக்கட்டத்தில், 2 லட்சத்து 21 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, அதன்மூலமாக கடன் களை வாங்கியுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1.44 லட்சம் கோடி அளவிற்கே கடன்பத்திரங்கள் வெளியிடப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.