மோடி - ஜின் பிங் சென்னை வருகை
சென்னை, அக். 2- பிரதமர் மோடி - சீன ஜனாதிபதி ஜின் பிங் இடையிலான சந்திப்பிற்காக விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதி கோரி, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங் ஆகியோர் 3 நாட்கள் தங்குகின்றனர். இவர்கள் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கக்கூடிய மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன்தபசு உள்ளிட்ட பாரம்பரிய புராதனச் சின்னங்களை இரு நாட்டுத் தலைவர்களும் சுற்றிப்பார்ப்பதுடன், முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி - சீன ஜனாதிபதி ஜின் பிங் இடையிலான சந்திப்பிற்காக விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதி கோரி, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதி கோரியுள்ளது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் அக்.3 ஆம் தேதி விசாரிக்க உள்ளது. அதேநேரம் இந்த மனு தொடர்பாக டிராபிக் ராமசாமி உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.
ஜெயக்குமார் பேட்டி
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறு இன்றி அனுமதி பெற்று பேனர் வைப்பதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.சட்டத்துக்கு புறம்பாக அனுமதியின்றி பேனர் வைப்பதுதான் தவறு என்றார்.