வாரணாசி:
வாரணாசி சமஸ்கிருதப் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில், ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது.வாரணாசியில் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத விஸ் வித்யாலயா உள்ளது. இங்கு மாணவர் பேரவைக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 1950 வாக்குகளில்- மாணவர்கள் 931, மாணவியர் 60 என மொத்தம் 991வாக்குகளை மட்டுமே (50.82 சதவிகிதம்) பதிவு செய்தனர்.
எனினும், வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டதில், ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி, பேரவைத்தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், நூலகர் ஆகிய நான்கு இடங்களி லும் படுதோல்வி அடைந்துள்ளது. தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் ஹர்ஷித் பாண்டே, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட என்எஸ்யுஐ வேட்பாளர் சிவம் சுக்லாவிடம், 485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஹர்ஷித் பாண்டே வெறும் 224 வாக்குகளே பெற்றார். இதேபோல ஏனைய ஏபிவிபி வேட்பாளர்களும் வெறும் 227, 106, 21 என வாக்குகளைப் பெற்று, என்எஸ்யுஐ வேட்பாளர்களிடம் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளனர்.