tamilnadu

img

எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: 6 பேர் கொண்ட என்ஐஏ குழு விசாரணை

நாகர்கோவில்:
குமரி மாவட்டம் களியக்காவிளை  பகுதியில் கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி இரவில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் (57) பணியில்  இருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பயங்கரவாதிகள் வில்சனை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால்வெட்டியும் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (29),  கோட்டார்  பகுதியை சேர்ந்த தவுபிக் (27) ஆகிய 2 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கேரளா வழியாக  கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியை ரயிலில் கடக்கும்போது கர்நாடக காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். 

இதற்கிடையே இவர்கள் மீது தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பயங்கரவாதிகளையும் காவல் துறையினர் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது 2 பேருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம் நெல்லை, காயல்பட்டி னம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் மக்களோடு மக்களாக கலந்திருந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும்,பயங்கரவாதிகளிடம் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளும் விசாரணைநடத்தினர்.  இவ்வழக்கின் குற்றவாளிகளான அப்துல்சமீம், தவுபிக் ஆகியோருக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக  தெரிய வந்தது. இதை தொடர்ந்து வில்சன் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதற்காக தக்கலை காவல் நிலையவளாகத்தில் உள்ள தனிக்கட்டிடம் என்.ஐ.ஏ-வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், ஞாயிறன்று தக்கலையில் உள்ள காவல் நிலைய தனி கட்டிடத்தில் பணிகளை துவக்கிய 6 பேர் கொண்டஎன்ஐஏ விசாரணைக் குழு முதல் கட்டமாக அப்துல் சமீமின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து தவுபீக்கின் வீடு, களியக்காவிளையில் சம்பவ இடம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.