tamilnadu

img

சமூக மாற்றமும் காந்தியின் கனவும்! -ஆர்.செம்மலர்

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தேசத்தந்தை மகாத்மா காந்தியின்  150 வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் பற்றி அறிவித்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி நாட்டில் பற்றியெறிந்த மதக்கலவரத்தின் போது பற்றியெறியும் நெருப்பின் நடுவே நின்று அதை அணைக்க முயற்சிப்பது போல் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அல்லவா அவரின் உயிரைக் குடித்தது . அவர் உயிராய் நம்பி வணங்கிய கடவுள் ராமர் ! தீவிரமாய் மதித்த மதம் இந்துமதம் ! ஹேராம் என்று சொன்னவரைக் கொன்றவரின் சிலையை வணங்கி ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுப்பவர்களைக் கொல்லத் துணியும் ஆட்சியாளர்கள் பதவியில் இருப்பது காலத்தின் கோலம்!

அவரிடமிருந்து அகிம்சையை பிரிக்க முடியாது எனும் வகையில் அதையே தன் ஆன்ம பலமாகக் கொண்டு உண்ணாநிலைப் போராட்டங்கள் மூலம் மக்களை ஈர்த்த மாபெரும் ஆளுமையின் எண்ணங்கள் எந்த இடத்தில் தோல்வியைச் சந்தித்தன எனும் கேள்வி அவரை வாசிக்கும் யாருக்கும் உருவாகும் . கடுமையாக உழைக்காமல் பெறப்படும் எந்த சொத்தும், அடிப்படைத் தேவையை விட சிறிது கூடுதலான சொத்தும் வெட்கமின்றிச் செய்யப்படும் திருட்டு என்றவர் காந்தி . இப்படி கூறிய போதும் முதலாளிகளின் சுரண்டலை தனிமனித செயல்பாடாக மட்டுமே கருதியதால் தான் அவர்களின் கருணை தொழிலாளிகளுக்கு வேண்டும் என்றும் தொழிலாளிகளின் இணக்கம் முதலாளிகளுக்கு வேண்டும் என்றும் நினைத்தார். கிராமப்புற விவசாயத்தை பெருக்கவும் வீடுதோறும் கைராட்டை பயன்படுத்தி துணி உற்பத்தி செய்யவும் உதவி கிராமப் பொருளாதாரம் மேம்படச் செய்யும் வகையிலும் அரசின் செயல்கள் இருக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் அரசின் செயல்பாடுகளோ அத்தியாவசியப் பொருள்களின் கள்ளச் சந்தை உருவாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்து நாட்டு மக்களிடையே கடுமையான ஏற்றதாழ்வு உருவாகவுமே வழிவகுத்தது

இதை உணர்ந்த அவர் அதிகாரம் உங்களைக் கெடுத்து விடவும், ஆடம்பரத்தில் சிக்கவும் இடம் கொடாதீர்கள் என ஆட்சியாளர்களை எச்சரித்தார் . இதற்கு செவி சாய்க்காத ஆட்சியாளர்களும் கட்சி ஊழியர்களும் அதிகாரிகளும் பதவி ஆசை மற்றும் லஞ்சம் ,ஊழல் மிக்கவர்களாய் மாறியதால் காங்கிரஸின் மீதான மக்களின் மனதில் நம்பிக்கை உடைந்து விரக்தியுணர்வு ஆக்கிரமிக்கவும் அவர்களின் சுயஒழுக்கம் கெடவும் வழி செய்தது . சுதந்திரம் கிடைத்த பிறகு நாள்தோறும் ஏராளமான மக்கள் அவரைத் தேடி வந்த போதும் மக்களின் மைய சிந்தனையாக அஹிம்சை இல்லை என்பதையும், பிரிட்டிஷாரை அகற்றும் கருவியாக மட்டுமே மக்கள் அதை ஏற்று ஒத்துழைத்துள்ளனர் என்பதையும் காந்தியால் உணர முடிந்தது .

புதிய இந்தியாவை உருவாக்க ஜனநாயக பாதையில் நடைபோட்டு , தியாகம் நிறைந்த வாழ்வை வாழ காங்கிரஸை வலியுறுத்திய அவர் அதன் நேர்மாறான போக்கின் காரணமாய் 1920ல் இருந்தது போல் காங்கிரஸின் மீதான நம்பிக்கை 1947ல் இல்லை எனும் முடிவிற்கு வந்தார். அதன் காரணமாகவே கட்சியைக் கலைத்து கிராமங்களின் வளர்ச்சியை மையப்படுத்தி பணி செய்ய பல்வேறு அமைப்புகளை உருவாக்கும் முடிவிற்கும் வந்தார். ஆக்கப்பணிகளும் கிராமங்களுக்கு செல்வதும் இல்லாத நிலையில் இந்திய சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செய்வதற்கு வேலைகள் எதுவும் இருக்காது . வாக்குகளை பறிக்க எண்ணும் சூழ்ச்சிக் காரர்களின் செயல்களுக்கு மக்கள் இரையாவார்கள் என்ற அவரின் சொல் சரி என்பது போல்தான் அவரின் மறைவிற்கு பின்பான இந்திய அரசின் செயல்பாடு அமைந்தது . அந்த செயல்கள் 75ல் அவசர நிலை திணிப்பு வரை பலவிதங்களில் மாறி 81ல் முதன்முதல் உலக வங்கியில் கடன் வாங்கும் பாதையில் கொண்டு சேர்த்தது . அதன் காரணமாக  90ல் பொருளாதாரம், கல்வி, தொழில் என அனைத்து அம்சங்களிலும் புதிய கொள்கைகளை அவர்கள் கொண்டு வரத் துவங்கியதும் மக்களின் வாழ்வில் நெருக்கடி அதிகரித்து அவர்களை சுயநலப் பாதையில் வேகமாக நகர்த்தத் துவங்கின.

அவை மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய தீவிர பாதிப்புகள் எந்தவிதமான பொய் வாக்குறுதிகளையும் நம்பச் செய்தது. அவர்கள் ஏமாந்து ஆதரித்து இன்றைய நாளில் குறுகிய இந்து மதவெறி செயல் திட்டம் கொண்ட அதிகாரத்தை மத்திய ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியுள்ளது. காந்தி வலியுறுத்திய மேன்மைக்கு பதில் இன்று மதவெறி செயல் திட்டமும், அதில் பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருநிறுவனங்களின் வல்லாதிக்கம் பெருக்கும் கொள்கைகளும் இணைந்து மக்கள் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கிறது . தன் வாழ்நாள் முழுவதும் எளிமையைக் கடைபிடித்து உண்மையே கடவுள் என்று கூறினாலும் இந்து மதத்தின் மீது அழுத்தமான பிடிப்புடன் வாழ்ந்த அவர் வர்ணாசிரம தர்மத்தை இந்து மதத்தின் சிறந்த ஏற்பாடாகவே கருதினார். தீண்டாமை மற்றும் ஏற்றதாழ்வுகளை மட்டும் மறுத்தார். தனிமனித மனமாற்றமே அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வாகக் கருதினார். இதே காலகட்டத்தில் 1917ல் நடந்த புரட்சி ரஷ்ய மண்ணில் ஜார் மன்னரின் ஆட்சி விளைவித்திருந்த அத்தனை துயரங்களிலிருந்தும் அம்மக்களை விடுவித்தது . மனிதனை மனிதன் சுரண்டாத , ஏமாற்றாத , ஆக்கபூர்வ செயல்பாட்டுகளுக்கான தியாகம் மற்றும் கொடுங்கோலன் ஹிட்லரின் ஆக்கிரமிப்பை முறியடித்து உலகை சமாதானப் பாதையில் நிறுத்த மனமுவந்த உயிர்த்தியாகங்கள் என பல வகையில் காந்தி இந்திய மண்ணில் விரும்பிய தனிமனித மனமாற்றங்கள் அனைத்தும் அங்கு சாத்தியமானது . அது மட்டுமின்றி 49ல் புரட்சியின் போது போர்வைகளைக் கூட பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டிய வறுமையின் உச்சியில் இருந்த சீனாவின் இன்றைய நிலை , 25 ஆண்டுகள் அமெரிக்காவுடன் மக்கள் யுத்தம் நடத்தி வென்ற வியட்நாம் , மருத்துவத்தில் உலகிற்கு வழிகாட்டியாய் உள்ள கியூபா, ஏவுகணை தயாரிப்பில் அமெரிக்காவிற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் வடகொரியா உள்ளிட்ட ஏராளமான சோஷலிச நாட்டு மக்களின் மனமாற்றங்களை இந்த உலகம் கண்டு வருகிறது .

மேற்கூறிய மாற்றங்களை மார்க்ஸ் எழுதிய மூலதனம் , கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மற்றும் லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும் , அரசும் புரட்சியும் போன்ற பல்வேறு புத்தகங்கள் காட்டிய விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாதப் புரிதலும் இஸ்கரா பத்திரிகையின் அன்றாட செய்திகள் காட்டிய நகர்வுகளும் , மாவோவின் நெடும்பயணம், ஹோசிமின் போன்ற சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடற்ற தலைவர்களின் தியாக வாழ்வும்,புரட்சி மக்களுக்கு தரப்போவது என்ன என்பதில் இருந்த தெளிவுமே சாதித்தது . இந்தியாவில் மதமோதல் இல்லாத  35  ஆண்டு மேற்குவங்க ஆட்சி ,  எல்லைப்புற மாகாணமான திரிபுராவின் அமைதி தழுவிய 30 ஆண்டுகால ஆட்சி , கேரளாவின் இன்றைய ஆட்சி வரை நடப்பதும் அனைத்து இடங்களிலும் ஊழல் எனும் சொல் இன்றி இருப்பதும் மேற்கண்ட கொள்கைகளை ஏற்றதன் காரணமாகவே ! காந்தியின் சிந்தனை கடவுள் நம்பிக்கை மீதான கருத்துமுதல்வாத சிந்தனை . அது தனிநபர் வாழ்வை மையமாகக் கொண்டது . ஆண்டவனின் பெயரால் எல்லாம் அவன் செயல் , விதி எனும் சொற்கள் மூலம் நடத்தப்படும் ஒத்தையா இரட்டையா விளையாட்டு . அதன் காரணமாகவே அவரால் மக்களின் அன்றாட வாழ்வில் மேன்மையை உறுதிப்படுத்த முடியாமல் போனது . ஏனென்றால் அம்மக்களும் அதே சிந்தனையுடன் தான் காலம் காலமாக தங்களது வாழ்வை நகர்த்தி வந்தும் மீள முடியாத துயரங்களில் மூழ்கியுள்ளனர் எனும் உண்மை அதில் அடங்கியுள்ளது .

அத்துடன் அச்சமயம் நாடு குடியரசாகவில்லை. மக்கள்  பல்வேறு சமஸ்தானங்களுக்கு கீழ் ‘மன்னன் எவ்வழி மக்கள்  அவ்வழி’ எனும் எண்ணத்துடன் வாழ்ந்தனர் . சுதந்திரம் அடைந்ததும் காந்தியே மனம் வெதும்பும் அளவு பல்வேறு  தவறுகளைச் செய்த காங்கிரஸ் அரசாங்கம் மக்களுக்கான நம்பிக்கையை எவ்விதம் உருவாக்க முடியும்? ஆள்வோரின் மீது நம்பிக்கை இல்லாத போது ஆக்கபூர்வமான வகையில்  தனிநபர் மனமாற்றம் எவ்விதம் சாத்தியம்? இதை அவர் உணர்ந்தாரா? எனும் ஐயம் அவரை வாசிப்பவர்களுக்கு நிச்சயம் உருவாகும் . முதலாளிகளின் சுரண்டலும் தொழிலாளிகளின் உழைப்பும் நேரெதிர் நலன்களை அடிப்படையாய்க் கொண்டு  எதிரெதிர் திசையில் பயணிப்பவை . வர்க்கப் போராட்டம் தான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து தொழிலாளிகள் வாழ்வை மேன்மைப்படுத்த முடியும் என்பதை உணராத தெளிவற்ற வழிகாட்டல் காரணமாகவும் தனிமனித மன மாற்றத்திற்கு தேவையான எந்த உத்தரவாதமும் இல்லை என்பதாலும் மிகப் பெரும் ஆளுமையாக அவர் இருந்த போதிலும் அவரின் எண்ணமும் செயலும் தோல்வியைத் தவிர வேறெதுவும் தர வாய்ப்பில்லை .

காந்தி 1944 ல் தனது 75 வயதில் தான் மார்க்சின் மூலதனம் நூலை வாசித்துள்ளார் .ஆனால் 1917ல் ருஷ்யப்புரட்சி நடந்து விட்டது. எனவே அவர் அந்தப் புத்தகம் கூறியுள்ள விசயம் மிகச் சரியானது என்று உணர்ந்த போதும் அதன் இறுதி கட்டத்தில் புரட்சி என்பது பலாத்காரம் மூலம் தான் சாத்தியம் என்பதை அறிந்ததும் அந்த சிந்தனையையே தவிர்த்துள்ளார் . அது மேலும் மேலும் மார்க்சிய நூல்களை வாசித்து அதை புரிந்து அதன் வழியில் இந்தியாவைப் புரிந்து கொள்வதிலிருந்தும் மக்களை வழி நடத்துவதிலிருந்தும் அவரைத் தடுத்து விட்டது . எனவே தான் வாழ்வின் இறுதிமூச்சு வரை மார்க்சிய நூல்களை வாசித்து உள்வாங்கி அந்த வழியில் சமூகம் மாற தன் சிந்தனைகளை மேம்படுத்திக் கொண்ட பகத்சிங் போல் ‘மார்க்ஸை கடின உழைப்பாளி’ என்று அங்கீகரித்த காந்தியால் அந்த உழைப்பின் பலன் இந்தியாவிற்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யும் பாதையில் நடைபோட முடியவில்லை.