புதுதில்லி:
5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி வந்துவிடும் என மோடிதலைமையிலான மத்திய அரசு கூறியிருக்கும் நிலையில், “இந்த வளர்ச்சியொன்றும் திடீரென சொர்க்கத்திலிருந்து வந்து விடுவதில்லை” என்றுகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிஒன்றில் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அதில், மோடி ஆட்சியால் இந்தியப் பொருளாதாரம் திடீரென வளர்ந்து விட்டது போன்ற தோற்றத்தை பாஜகவினர் ஏற்படுத்துவதை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:“மத்திய நிதியமைச்சர் நடப்பு நிதிஆண்டின் பட்ஜெட்டைத் தாக்கல்செய்யும்போது, 2024 ஆம் ஆண்டுக் குள் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டும்என்றார். இந்த மதிப்பு என்பது திடீரென்று சொர்க்கத்தில் இருந்து வந்துவிடவில்லை.
பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை பிரிட்டிஷார்கள் அமைக்கவில்லை. விடுதலைக்கு பிறகு ஆட்சி செய்த இந்தியர்களே அமைத்தனர். ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோரால் அமைக்கப்பட்ட ஐஐடிகள், இஸ்ரோ, ஐஐஎம்கள், வங்கி அமைப்பு போன்றவற்றால் இந்தியா பன்மடங்கு வளர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என நிதியமைச்சர்சொல்ல முடியும்.நாட்டின் வளர்ச்சிக்குப் பலரும்தொண்டாற்றினர். நமது முன்னோடிகள், திட்டமிட்டப் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தனர். ஆனால், இன்று இருப்பவர்கள் திட்ட கமிஷனையே கலைத்து விடுகிறார்கள்.இந்தியாவின் வளர்ச்சிக்கு மற்றொரு முக்கியக் காரணம், மதம்,சாதி, பாலினம், பிறப்பு ஆகியவற்றை கடந்து அனைவருக்கும் சமூகப் பொருளாதார சமத்துவத்திற்கு இந் திய அரசியலமைப்பு அளிக்கும் பாதுகாப்பு ஆகும். மதச்சார்பின்மையையும், நல்லிணக்கத்தையும் அரசியல் சாசனம் பாதுகாக்கிறது.அதனடிப்படையில் சிறுபான்மையினரின் கல்வி மற்றும்கலாச்சார உரிமைகளை பாதுகாக்கவும் நமது நாட்டின் நிறுவனர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தனர். சங்கங்களை அமைப்பதற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும், தீண்டாமை ஒழிப்பிற்கும், தொழிற்துறை வளர்ச்சிக்கும், சோசலிசத்திற்கும் இந்தியா உறுதியளித்தது. இந்த தொலைநோக்கு பார்வையால்தான் இந்தியா பிழைக்குமா? அன்றைய காலத்தில் பலர் எழுப்பியசந்தேகங்கள் இன்று உடைக்கப்பட்டுள்ளன.”இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.