புதுதில்லி:
வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரம் குறித்து செய்தி வெளியிட்டகேரவன் பத்திரிகையாளர்கள் மீது மதவெறிக் கும்பல் நடத்திய தாக்குதலுக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தில்லி பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.கே. பாந்தே மற்றும் பொதுச் செயலாளர் சுஜாதா மாதோக் கூறியிருப்பதாவது:
தில்லி காவல்துறையினர் வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து செய்திகள் மற்றும் கருத்துக்களை வெளியிட்ட செய்தியாளர்களில் சிலரைக் குறிவைத்துத் தாக்கியதையும், கலவரங்களுக்குப் பின் அங்கு நடைபெற்ற விவரங்களை வெளியிட்ட கேரவன் இதழின் செய்தியாளர்கள் 3 பேரைக் குண்டர் கும்பல் சமீபத்தில் தாக்கி இருப்பதையும் தில்லிப் பத்திரிகையாளர் சங்கம் கண்டிக்கிறது.ஸ்தல அரசியல்வாதி ஒருவரால் தலைமைதாங்கப்பட்ட மதவெறிக் கும்பலால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள செய்தியாளர்கள் பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருக்கிறார்கள். குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் இளம்பெண் செய்தியாளருக்கு எதிராகக் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும், இவ்வாறு செய்தியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்கப்பட்டு மூன்று நாட்களாகியும்கூட, காவல்துறையினர் தாக்கிய கயவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்திடவில்லை.
இதற்கு முற்றிலும் மாறாக, கலவரங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புக் கிளர்ச்சிகள் சம்பந்தமாக பல செய்தியாளர்கள் விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் வினோத் துவா மற்றும் பிரசாந்த் தாண்டன் ஆகியோரும் அடங்குவர்.பிப்ரவரியில் கலவரங்கள் நடந்து ஐந்து மாதங்கள் கடந்தபின்பும், கலவரங்களின்போது செய்தியாளர்களைத் தாக்கி, காயங்கள் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கலவரத்தின்போது ஜேகே 24 x 7 டிவியைச் சேர்ந்த ஆகாஷ் நாபா, துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்டு காயமடைந்தார். என்டிடிவியைச் சேர்ந்த அரவிந்த் குணசேகர் சில பற்களை இழந்தார். இவ்வாறு தாக்குதலுக்கு ஆளான மற்றவர்கள், சௌரப் சுக்லா, மரியம் ஆல்வி, என்டிடிவி-ஐச் சேர்தந்த சுசில் ராதீ, நியூஸ் 18ஐச் சேர்ந்த ரஞ்சுன் ஷர்மா, இந்தியன் எக்ஸ்பிரசைச் சேர்ந்த சிவ்நாராயண் புரோகித், டைம்ஸ் நவ்வைச் சேர்ந்த பர்வீணா புர்கயஸ்தா மற்றும் ஆஜ் தக்கைச் சேர்ந்த அக்சய் குமார் டோங்கரே மற்றும் தனுஷ்ஸ்ரீ முதலானவர்களும் தாக்குதலுக்கு ஆளானார்கள். எனினும் அவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இத்தகைய தாக்குதல்கள் அனைத்தும் ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சமூகத்தையும் அச்சுறுத்தியிருக்கிறது என்றும், மேலும் இவை பத்திரிகை சுதந்திரத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் ஏவப்பட்ட தாக்குதல்கள் என்றும் தில்லி பத்திரிகையாளர் சங்கம் எச்சரிக்கிறது. 2020 இல் வெளியிடப்பட்டுள்ள எல்லைகள் இல்லா செய்தியாளர்கள் அட்டவணை (Reporters Without Borders Index), பத்திரிகை சுதந்திர அட்டவணையில் இந்தியாவின் அணிவரிசை மொத்தம் உள்ள நாடுகளில் 2 இடங்கள் மேலும் வீழ்ச்சியடைந்து 142ஆக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. இது மேலும் வீழும் நிலையில் இருக்கிறது. தாக்குதலைத் தொடுத்த கயவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததும், நாட்டின் தலைநகரிலேயே பத்திரிகையாளர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதும் தீய அறிகுறிகளாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)