புதுதில்லி:
உத்தரப்பிரதேசத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாயாவதி கூறியிருப்பதாவது:
“பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணிஅமைந்தது முதல் அகிலேஷ் யாதவும் அவரது மனைவி டிம்பிள் யாதவும் எனக்கு நிறைய மரியாதை அளித்தனர். தேச நலனுக்காக நானும் வேறுபாடுகளை மறந்து அவர்களுக்கு மரியாதை அளித்தேன். எங்களது உறவு, அரசியலோடு நின்றுவிடாது, அது என்றென்றும் தொடரும். எனினும் அரசியல் நிர்பந்தங்களை நாம் புறக்கணிக்க முடியாது. நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதியின் யாதவர் சமூக வாக்குகள் பகுஜன் சமாஜூக்கு கிடைக்கவில்லை.
அதற்காக இது நிரந்தர பிரிவல்ல. எதிர்காலத்தில் அகிலேஷ் தனது அரசியல் பயணத்தில் வென்றால் மீண்டும் கூட்டணி அமைப்போம். ஆனால், அவர் அரசியல் பயணத்தில் சிறந்து விளங்கவில்லை எனில் தனித்தே இயங்குவோம். விரைவில் வரவுள்ள இடைத் தேர்தலை தனித்தேசந்திக்கவுள்ளோம்.” இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
இதனிடையே, “பகுஜன் சமாஜ் கட்சிதனித்து போட்டியிடுவது என முடிவெடுத்து விட்டால் அதனை வரவேற்கிறோம். இதற்கு மேல் இதுபற்றி பேச விரும்பவில்லை” என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்