புதுதில்லி:
வங்கிகளின் தலைமைச் செயல்அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பளத்தில் 50 சதவிகிதத்தை வங்கியின் செயல்பாட்டைப் பொறுத்தே முழுமையாகப் பெற முடியும் என்ற புதிய விதிமுறையை, ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.இந்த புதிய விதிமுறை, ஏப்ரல்1, 2020 முதல் அமலுக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.தலைமைச் செயல் அதிகாரி உட்பட வங்கிகளின் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 50 சதவிகிதம் மாற்றத்துக்குரிய ஊதியமாக வைக்கப்படும். குறிப்பிட்ட வங்கியின் நிதி நிலையைப் பொறுத்து அது மாறுபடும்.இந்த மாறுபாட்டுக்குரிய சம்பளம் (Variable pay) நிர்ணயிக்கப்பட்ட தொகையிலிருந்து அதிகபட்சம் 300 சதவிகிதம்வரை இருக்கும். பங்கு இழப்பு களும் இதில் அடங்கும். தனியார் வங்கிகள், உள்ளூர்வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் பேமெண்ட் வங்கிகள் மட்டுமன்றி, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்த பன்னாட்டு வங்கிகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.