tamilnadu

img

பி.சி.ஜோஷியால் ஈர்க்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சஜ்ஜத் ஜாஹீர் - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 16

புகழ்மிக்க புரட்சி எழுத்தாளர் சஜ்ஜத் ஜாஹீர் லக்னோ நகரில் 5.11.1899-ல் பிறந்தார். மார்க்சிய தத்துவவாதியாகவும், உருது எழுத்தாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தவர். இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி அதன் பொதுச் செயலாளராய் பொறுப்பேற்று வழிநடத்தியவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர். இந்தியப் பிரிவினைக்குப்பின் பாகிஸ்தானில் குடியேறி அங்கு பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்.  1932-ல் அங்காரே (நீரு பூத்த நெருப்பு) என்ற சிறுகதைத் தொகுப்பை முதன் முதலில் வெளியிட்டார். அதில் அகமது அலி, ரஷீத் ஜகான், மகமுத் ஜாபர் ஆகியோரின் கதைகளும் இருந்தன. 1933-ல் பிரிட்டிஷ் அரசு ‘அங்காரே’ மதநம்பிக்கைகளைப் புண்படுத்துவதாகக் கூறி தொகுப்பு நூலைத் தடை செய்தது. இது பலருக்கும் நேர்ந்ததால் எழுத்தாளர்களுக்கு ஒரு சங்கம் அமைக்க வேண்டுமென்று சஜ்ஜத்  முடிவுசெய்தார். தோழர் பி.சி. ஜோஷியுடன் கலந்து ஆலோசித்தபின் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை துவக்கினார். சஜ்ஜத்தும், அகமது அலியும் இந்த அமைப்பின் முன்னோடிகளாவர். இதில் மாபெரும் எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்தை தலைமையேற்கச் செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பி.சி.ஜோஷி அனைத்து உதவிகளையும் செய்தனர். உருது, இந்தி, வங்கம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி மொழிகளின் படைப்பாளர்களை பிரிட்டிஷ் ஆட்சிக் கெதிராக சஜ்ஜத் ஒன்றுதிரட்டினார். அமைப்புகளையும் உருவாக்கினார்.

அவர் நாவல், சிறுகதை, கட்டுரைகள், கவிதைகளைப் படைத்தனர். அவரது கஜல் பாடல்கள் இன்று வரை மேடைகளில் பாடப்படுகின்றன. அவரது நாடகங்களும் புகழ்பெற்றவை. அவரது நாவல் லண்டன் கி ஏஜ் ராத் அதிகம் விற்பனையானது. ரோஷ்ன் என்ற அவரது கட்டுரைத் தொகுப்பில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் நோக்கங்கள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். பாரசீக மகா கவி ஹபெஸ்ஸின் கவிதைகள் பற்றி ஒரு ஆய்வு நூலை எழுதினார். ஷேக்ஸ்பியரின்  ஒதெல்லோவையும், கேண்டைடையும் உருதுவில் மொழியாக்கம் செய்தார். கலீல் ஜிப்ரானின் மதகுரு, தாகூரின் கோரா என்ற நாவலையும் மொழியாக்கம் செய்தார். அவரது கடைசி கவிதைத் தொகுப்பு பிகியா நிலம் ஆகும். சஜ்ஜத்  ஜாஹீரின் மனைவி ரஜியா. நான்கு மகள்கள். ஒரு மகள் நாதிரா பாப்பர், நடிகை. நசீம் பாட்டியா பேராசிரியை. சஜ்ஜத் ஜாஹீர்  சோவியத் யூனியன் சென்றிருந்த போது கஜகஸ்தானில் 11.9.1973 -ல் காலமானார். அவரது படைப்புகள் நிரந்தரமாய் வாழ்கின்றன.