tamilnadu

img

பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதைத் தடுத்திட கிளர்ச்சி

புதுதில்லி:
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்திட, மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்திட வலியுறுத்தியும் டிசம்பர் மாதம் முழுவதும் கிளர்ச்சிப் போராட்டங்கள், சிறப்பு மாநாடுகள்; டிசம்பர் மாதம் தொடங்கி மத்தியத் தொழிற்சங்கங்கள் 2020 ஜனவரி 8 அன்று நடத்திட இருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தம் வரை மிகப் பெரிய அளவில் நடத்திட வேண்டும் என்று கட்சி அணிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழுக் கூட்டம் நவம்பர் 16, 17 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அயோத்தி விவகாரம் -தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது;  நீதி அல்ல
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அயோத்தி தாவாவிற்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு தீர்வினை எட்டமுடியவில்லையெனில், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, நீதிமன்றத்தின் தீர்ப்பேயாகும் என்று கூறிவந்திருக்கிறது.  சட்டத்தின் ஆட்சி நடைபெறக்கூடிய மதச்சார்பற்றக் குடியரசில் இத்தகைய தாவாவைத் தீர்ப்பதற்கு, இது ஒன்றே வழியாகும். இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும் தீர்ப்பில் காணப்படும் சில அம்சங்கள் மிகவும் ஆழமான கேள்விகளை எழுப்பி யிருக்கின்றன.உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியால் தலைமை தாங்கப்பட்ட அரசமைப்புச் சட்ட அமர்வாயம், அரசமைப்புச்சட்ட விழுமியங்களை உயர்த்திப்பிடிக்க உறுதிபூண்டிருப்பதாக திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறது. “சொத்தின்மீது சிவில் உரிமை கோரி நீதிமன்றத்தின் முன் கொணரப்படும் வழக்குகள் மதச்சார்பின்மைக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படும்...” “ஓரிடத்தின் உரிமை என்பது நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட முடியாது” என்றெல்லாம் நீதிமன்றம் பிரகடனங்கள் செய்துள்ளபோதிலும், தீர்ப்பின் இறுதி முடிவு என்பது, ஒரு சாராரின் நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது.

இந்த வழக்கின் மனுதாரர்களைக் கையாளுவதற்குப் பதிலாக, தீர்ப்பு இந்துக்கள் என்றும் முஸ்லீம்கள் என்றும் குறிப்பிட்டு தன் வரம்பை விரிவுபடுத்தி விலகிச் சென்றிருக்கிறது.1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு “கடுமையான சட்டமீறல்” என்று சந்தேகத்திற்கிடமின்றித் தெள்ளத்  தெளிவாகக் கூறியிருக்கிறது. ஆனால், இறுதியில் அந்த இடத்தை, மசூதி இடிக்கப்படுவதற்குக் காரணமான கிரிமினல்களிடமே ஒப்படைத்திருக்கிறது. 1989இல் இதுதொடர்பாக ரிட் மனு ஒன்று விசுவ இந்து பரிஷத் என்னும் அமைப்பின் தலைவரால் தாக்கல் செய்யப்பட்டது. இதுதான் பாபர் மசூதி இடிப்பிற்கான வன்முறை வெறியாட்டங்களுக்கு தலைமை தாங்கிய அமைப்பாகும்.1949 டிசம்பரில் மசூதி இடிக்கப்பட்டு அங்கே சட்டவிரோதமான முறையில் சிலைகள் வைக்கப்பட்டதும், ஒரு கடுமையான சட்டமீறல் என்று தீர்ப்பு கூறுகிறது. எனினும், தாவாவுக்கு உரிய ஒட்டுமொத்த இடமும் சட்டமீறலை மேற்கொண்டவர் களிடமே ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை (The Archaeological Survey of India)யின் முடிவுகள், இந்துத்துவா சக்திகளால் கூறப்படுவதுபோன்று, கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பு தெளிவாகவே கூறுகிறது. எனினும், 1528க்கும் 1857க்கும் இடையே பாபர் மசூதியின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் பிரத்யேகமாக முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று காட்டுவதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறியிருக்கிறது. 1528இல் கட்டப்பட்ட மசூதி, 1856இல் ஆவாதிடமிருந்து (நவாப்பிடமிருந்து) பிரிட்டிஷாரால் கையகப்படுத்தப்படும்வரை, மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக, முதலில் முகலாயர்களின் ஆட்சியின் கீழும், பின்னர் ஆவாத் நவாப்புகளின் ஆட்சியின் கீழும்தான் இருந்தது.  1857க்குமுன் தாவா எதுவும் இல்லை என்கிற உண்மையே, இந்த இடம் முஸ்லிம்களின் பிரத்யேக உடைமையாக இல்லை என்றோ, இந்த மசூதி தொழுகைக்காக பயன்பாட்டில் இல்லை என்றோ முன்வைக்கப்படும் வாதத்தை நிரூபிக்க வழியில்லாமல் செய்கிறது.ஆனால் அந்த இடத்தை தொடர்ந்து எங்களது உடைமையாக வைத்திருந்தோம் என்று இந்துக்கள் தரப்பில் கூறப்படுவதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது உண்மைகளின் அடிப்படையிலானது அல்ல; மாறாக மதம் சார்ந்த நம்பிக்கை என்பதன் கையே ஓங்கியிருப்பது வெளிப்பட்டிருக்கிறது.

1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டமானது, அனைத்து மதங்களின் சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடித்திடும் அரசமைப்புச் சட்டத்தின் கடப்பாடுகளை செயல்படுத்துகிறது என்று இத்தீர்ப்பு மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறது. 1947 ஆகஸ்ட் 15க்குப் பின் எந்தவொரு வழிபாட்டுத் தலமும் அது இருக்கின்ற நிலையிலிருந்து (status quo) மாற்றப்பட முடியாது. எனினும், நீதிமன்றம் இதுபோன்ற தாவாக்கள் காசி, மதுரா போன்று வேறிடங்களிலும் எதிர்காலத்தில் எழுப்பப்படுவதற்குத் தடை விதித்திடத் தவறியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், காசி மற்றும் மதுரா சம்பந்தமான உரிமை கோரும் வழக்குகள் தங்கள் நிகழ்ச்சிநிரலில் “இப்போதைக்கு” இல்லை என்று மறைமுகமானமிரட்டல் விடுத்திருக்கிறார்.  இதிலிருந்து, எதிர்காலத்தில் எந்த சமயத்திலும் இப்பிரச்சனைகளின் மீதும் மக்கள் மத்தியில் உணர்ச்சிகளை உசுப்பிவிடப்பட முடியும் என்பதற்கு இது ஓர் அச்சுறுத்தும்அறிவிப்பாகும். இதுபோன்ற சாத்தியக்கூறு களுக்குத் தடை விதிக்கக்கூடிய விதத்தில் உச்சநீதிமன்றத்தால் எதுவும் கூறப்படவில்லை. 

1949 டிசம்பர் மற்றும் 1992 டிசம்பர் நிகழ்வுகள் மிகவும் கடுமையான சட்டமீறல்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிற போதிலும், இத்தகைய கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கயவர்களுக்கு எதிராக நீதி நிலைநிறுத்தப்படவில்லை. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்குக் காரணமானவர்கள் என்று எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் போன்றவர்களுக்கு எதிராக உள்ள வழக்கு சுமார் 28 ஆண்டுகளாக  நடந்துகொண்டிருக்கிறது. இது விரைவுபடுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மேற்கண்ட வழக்கில் நீதி வழங்குவதன் மீது செல்வாக்கு செலுத்தக்கூடாது.நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கடந்த இருபதாண்டுகளாக மதக் கலவரங்கள் மூலமாக ரத்தக் களறியை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கானவர்களை ஏற்கனவே  காவு கொண்டு நீண்டகாலமாக இருந்து வந்த தாவாவினை, தீர்த்து வைப்பதற்காக அளிக்கப்பட்டிருக்கிறது. 

சபரிமலை சீராய்வு மனு தீர்ப்பு
உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வாயம், சபரிமலைக் கோவிலில் வழிபடுவதற்கு அனைத்து வயதுடைய  பெண்களையும் அனுமதித்து 2018 செப்டம்பரில் அளித்த தீர்ப்பு சம்பந்தமாக, தாக்கல் செய்யப்பட்டிருந்த மறு ஆய்வுமனுக்கள் மற்றும் ரிட் மனுக்களைக் விசாரிப்பதாக இருந்தது. மறு ஆய்வு மனுக்களை முடித்து வைப்பதற்குப் பதிலாக, பெரும்பான்மை தீர்ப்பு, வழக்கமான நெறிமுறைகளிலிருந்து விலகி, மத உரிமைகள் சம்பந்தமாக எண்ணற்ற பிரச்சனைகளை எழுப்பி, தீர்ப்பு வழங்கவேண்டும் என்று விஷயத்தைப் பெரிதாக்கி, ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச்சட்ட அமர்வாயத்திற்கு அனுப்பியிருக்கிறது. இரு நீதிபதிகளின் சிறுபான்மை தீர்ப்பு, அனைத்து மறு ஆய்வு மனுக்களையும் நிராகரித்து, 2018 தீர்ப்பைத் திட்டவட்டமாக உயர்த்திப் பிடித்திருக்கிறது.

மற்ற மதங்களில் உள்ள பெண்களின் உரிமைகள் சம்பந்தமான பிரச்சனைகளுடன் இந்த விஷயத்தையும் திசைமாற்றி (அது தொடர்பாக நீதிமன்றத்தின் இதர அமர்வாயங்களில் ஏற்கனவே வழக்குகள் விசாரிக்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றன), பெரும்பான்மை தீர்ப்பானது 2018 தீர்ப்பை உயர்த்திப்பிடித்திட தவறி இருக்கிறது. மறு ஆய்வு மனுக்களை நிலுவையில் வைத்திருப்பதன் மூலம், சந்தேகமான மற்றும் நிச்சயமற்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, அனைத்து தளங்களிலும் பெண்களின் சமத்துவத்திற்காக உறுதிபூண்டிருக்கிறது. நீதிமன்றம், இது தொடர்பாக எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தீர்மானகரமான நிலைப்பாட்டிற்கு வர வேண்டும் என்று விரும்புகிறது.             

ரபேல் ஊழல்
ரபேல் ஊழல் விவகாரம் தொடர்பான மறுஆய்வு மனுவை டிஸ்மிஸ் செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு, மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் இதர புலனாய்வு அமைப்புகள் ரபேல் பேரத்தில் நடந்துள்ள கையாடல் மற்றும் ஊழல் தொடர்பாக மேற்கொண்டுவரும் புலன்விசாரணைகளுக்கு எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்றுவிளக்கம் அளித்திருக்கிறது.  இந்த அரசாங்கத்தின் கீழ், மத்தியக் குற்றப்  புலனாய்வுக்கழ கத்தின் மீது நம்பிக்கை வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ரபேல் பேரம் தொடர்பாக சர்ச்சைவெடித்துக்கிளம்பியிருப்பதாலும், இந்த அரசாங்கத்திற்கு மிகவும் வேண்டிய கூட்டுக்களவாணி கார்ப்பரேட் நண்பர்கள் ஆதாயம் அடையும் விதத்தில் மிகப்பெரிய அளவில் அரசின் கஜானாவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாலும், இதில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக புலனாய்வு மேற்கொண்டிட ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தது.  மோடி அரசாங்கம் இதனை ஏற்க மறுத்தது. இதிலிருந்தே மறைப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது.இந்த ஊழலை புலன்விசாரணை செய்திட ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தகவல் தொடர்பு, பொதுப் போக்குவரத்து ஆகியவற்றிற்குக் கட்டுப்பாடுகள் விதித்து நூறு நாட்களுக்கும் மேலாகிவிட்டது. கட்டுப்பாடுகள் சற்றே தளர்த்தப் பட்டிருப்பதாக, அறிவிக்கப்பட்டபோதிலும், மக்களின் தினசரி வாழ்க்கை சொல்லொண்ணா இன்னல்களின் காரண மாக சீர்குலைந்திருப்பது தொடர்கிறது. மூர்க்கத்தனமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது தொடர்கிறது. அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அல்லது அவர்கள் மீது குற்றச்சாட்டுகள்எதுவும் இல்லை என்றும் அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வரமுடியவில்லை என்பதும் அல்லது அவர்ளைச் சந்தித்திட எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பதும் உண்மையாகும். நூற்றுக்கணக்கானவர்கள் நாட்டில்உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. எத்தனை பேர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது நூறு நாட்கள் கடந்த பின்னரும் கூட இதுவரையில் விளக்கப்படவில்லை.

மக்களின் இயல்பு வாழ்க்கையும் நடவடிக்கைகளும் பாதிப்புக்கு உள்ளாகும் விதத்தில் விதிக்கப்பட்டிருக்கிற கட்டுப்பாடுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. அங்கே இன்னமும் இணைய தள வசதியும், குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படுவதும் தடை செய்யப்பட்டிருப்பது தொடர்கின்றது.பெரிய அளவில் சுற்றுலாவையும் பழங்கள் மற்றும் குங்குமப்பூ போன்ற பணப் பயிர்களைச் சார்ந்திருந்த அம்மாநிலத்தின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.  இவற்றிற்கான ஆர்டர்களில் பெரும்பாலானவை இணைய வழியாகவே நடந்து வந்தன. இது சீர்குலைக்கப்பட்டிருப்பது தொடர்கிறது.சராசரியாக, ஒவ்வோராண்டும் ஆப்பிள் பழங்கள் வர்த்தகம் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும். இது முற்றிலுமாக அழிந்துவிட்டது. பாஜக அரசாங்கம், இதனை ஒரு தேசியப் பேரிடராக அறிவித்திட வேண்டும், ஆப்பிள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும்.அடைத்து வைக்கப்பட்டிருக்கிற அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அரசமைப்புச்சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் முழுமையாக மீண்டும் அளிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள் தங்கள் எதிர்கால வேலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் என்னாகுமோ என்று பயங்கரமான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இத்தகு நிலையைத் தொடர அனுமதிக்க முடியாது.

மாநில சட்டமன்றத்  தேர்தல்கள்
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், கேரளம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் பாஜகவினால் விசிறிவிடப்பட்டு வந்த தேசியவெறி, மதவெறிப் பிரச்சாரங்களின் தாக்கம் மங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.பொருளாதார மந்தத்துடன் மக்களின் வாழ்வாதாரங்களின் மீதான சுமைகள் அதிகரிப்பது முன்னுக்கு வந்துகொண்டிருப்பது கடுமையான உண்மையாகும். இது அதிகரித்துவரும் பொருளாதார வறிய நிலைக்கு எதிராக மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை உக்கிரப்படுத்துவதற்கான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஜார்க்கண்ட்
ஜார்க்கண்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பத்து இடங்களில் போட்டியிடுகிறது. மாநிலத்தில் மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக அனைத்து இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையேஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்று அனைத்து இடதுசாரிக் கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை
நாட்டின் கல்விக் கொள்கையில் மோடி அரசாங்கத்தால் பல்வேறு அம்சங்களின் மீது முன்மொழியப்பட்டுள்ள கடுமையான திருத்தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.கட்சி, ஏற்கனவே இது குறித்து தன் கருத்துக்களை பொது வெளியில் வெளியிட்டிருக்கிறது. இந்தப் புதிய கல்விக் கொள்கை, இந்தியாவின் எதிர்காலத்திற்கு கேடு பயக்க்க்கூடியதாகும். கல்வியை மக்களின், குறிப்பாக, குழந்தைகளின் உரிமையாகக் கருதாமல் சலுகையாக மாற்றுகிறது. இது முற்றிலும் நாட்டின்நலன்களுக்கும் நாட்டு மக்களின் எதிர்காலத் திற்கும் எதிரானதாகும்.புதிய கல்விக் கொள்கையை எதிர்த்திடும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி, தேசிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு, அரசாங்கத்தை இந்த கொள்கையைத் திரும்ப்ப் பெறச் கட்டாயப்படுத்துவதைக் குறிக்கோளாக்க் கொண்டு, எதிர்ப்பு இயக்கத்தை நடத்திட வேண்டும்.

அரசியல் தலைமைக்குழு அறைகூவல்
பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யாருக்குத் தாரைவார்த்திட, மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்திட வலி யுறுத்தியும் டிசம்பர் மாதம் முழுவதும் கிளர்ச்சிப் போராட்டங்கள், சிறப்பு மாநாடுகள், டிசம்பர் மாதம் தொடங்கி, மத்தியத் தொழிற்சங்கங்கள் 2020 ஜனவரி 8 வரை நடத்திட இருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தம் வரை மிகப் பெரிய அளவில் நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அனைத்துக் கட்சிக் கிளைகளையும்  அறைகூவி அழைக்கிறது.

- தமிழில்: ச. வீரமணி