புதுதில்லி:
மதத்தையும், அரசியலையும் கலந்ததன் மூலம் நாங்கள் (சிவசேனா) நிறைய துன்பங்களைச் சந்தித்திருக்கிறோம் என்று மகாராஷ்டிர மாநில முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற போராட் டங்களில் சில இடங்களில் வன் முறை ஏற்பட்டது. இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, உருக்கமாகப் பேசியுள்ளார்.“எந்தவொரு சமூகத்தையோ அல்லது மதத்தையோ சேர்ந்த மக்களின் உரிமைகள் மீறப்படுவதற்கு மகாராஷ்டிர அரசு ஒருபோதும் அனுமதிக்காது. போராட விரும்புபவர்கள் அமைதியான முறையில் போராடலாம்.அரசியல் ஒரு சூதாட்டம் என்பதை இப்போது நாங்கள் உணர்ந்திருக்கிறோம். மதத்தையும், அரசியலையும் கலந்ததில் நாங்கள் நிறைய துன்பங்களைச் சந்தித்திருக்கிறோம்.இப்போது அமைந்திருக்கும் மூன்று கட்சி கூட்டணி அரசுதான் எங்கள் பலம். மூன்று கட்சிகளும் மனதால் இணைந்து அமைத்திருப்பது புல்லட் ரயிலில் செல்வோருக்கான கூட்டணி அல்ல; ஆட்டோ ரிக்ஷாவில் செல்வோருக்கான கூட்டணி ஆகும்.”இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.