ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 2017இல் பசுப்பாதுகாப்புக் குழு என்ற பெயரில் இயங்கிடும் குண்டர் கும்பலால் கொல்லப்பட்ட பால் வியாபாரம் செய்திடும் பெஹ்லுகான் மகன்கள் மீது, பசு கடத்தி வந்ததாக தாக்கல் செய்யப் பட்டிருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவுபிறப்பித்திருப்பது, அந்தக் குடும்பத்தினருக்கு மிகவும் தேவைப்படும் நிவாரணத்தை வழங்கி இருக்கிறது. இருப்பினும் பெஹ்லுகான் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக அவரது குடும்பத் தினருக்கு எந்த அளவிற்கு நீதி கிடைத்திடும்எனத் தெரியவில்லை. ஏனெனில் பெஹ்லு கானைக் கொன்ற குண்டர் கும்பலைச் சேர்ந்த அனைவரும் நீதிமன்றத்தில் விசாரணையின்போது சென்ற ஆகஸ்ட் மாதத்தில்விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்.
நீதிபதி பங்கஜ் பண்டாரியின் தீர்ப்பின்
குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், பெஹ்லுகான் மற்றும் அவருடைய மகன்கள் (இர்ஷத் மற்றும் ஆரிப்) மற்றும் பசுவையும் கன்றுக்குட்டிகளையும் ஏற்றி வந்த டிரக்கின் ஓட்டுநர் கான் முகமது ஆகியவர்கள் அவற்றை இறைச்சிக்காக ஓட்டிவரவில்லை என்றும், மாறாக, அவற்றை வைத்து பால் கறந்து ஜீவனம்செய்வதற்காகத்தான் வாங்கி வந்தார்கள் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டி ருப்பதாகும்.நீதிமன்றம் தலையிட முடியும்!பொதுவாக ஒரு வழக்கில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின், அதில் உயர்நீதிமன்றம் தலையிடுவ தில்லை என்ற போதிலும், சட்ட நடை முறைகள் பகிரங்கமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக அது காணுமானால், எந்த சமயத்திலும் தலையிடு வதற்கான அதிகாரம் அதற்கு உண்டு. இந்த வழக்கில், பெஹ்லுகானும் அவருடைய மகன்களும் கொண்டுவந்த பால் கறக்கும் பசுவும் அதன் கன்றுக் குட்டியும், இறைச்சிக்காகக் கொண்டுவரப்பட்டதாகக் காட்டிட காவல்துறையினர் முயற்சித்திருப்பதாகவே தோன்றுகிறது. பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினர்மீதே முறைகேடான முறையில் வழக்கு தொடுத்து அவர்களைத் தண்டித்திட காவல்துறையினர் முயற்சித்திருப்பது இதில் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.
பெஹ்லுகானும் அவருடைய மகன்களும் ஜெய்பூரில் நடைபெற்ற கால் நடைக் கண்காட்சியில், 2017 ஏப்ரல் 1 அன்று, பசுவையும் கன்றுக் குட்டியையும் வாங்கிக் கொண்டு, ஹரியானா மாநிலத்தில் உள்ள தங்கள் ஊரான ‘நூ’ (Nuh)விற்கு டிரக்கில்ஏற்றி எடுத்து வந்தபோது, பசுப் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் இயங்கும்குண்டர் கும்பல் அவர்களை மிகவும் கொடூரமான முறையில் தாக்கி இருக்கிறது. படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெஹ்லுகான் சிகிச்சை பலனின்றி இரு நாள் கழித்து இறந்துவிட்டார்.இந்த சம்பவம் நடந்ததும், பெஹ்லுகான் குடும்பத்தினர் மீதே, ‘ராஜஸ்தான் எருது, மாடுகள் கொல்லுதல் தடை மற்றும் தற்காலிகமாக வேறிடங்களுக்கு எடுத்துச்செல்லுதல், ஏற்றுமதியை முறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்ததும், முந்தைய பாஜக அரசாங்கத்தின் காலத்தில் என்ற போதிலும், இப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சியில் இந்த ஆண்டு மே மாதத்தில்தான், அவர்கள் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது .
அசோக் கெலாட் அரசின் கவனம் தேவை
இந்த வழக்கின் நிகழ்ச்சிப்போக்குகள் அசோக் கேலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்திற்கு சில சங்கடங்களை ஏற்படுத்திடக் காரணமாக அமைந்தது.ஆனாலும், பின்னர் இந்த அரசாங்கம் மாநிலத்தில் ‘குண்டர் கும்பல் தடைச் சட்டம்(anti-lynching law)’ ஒன்றை நிறைவேற்றி இருக்கிறது. மேலும், பெஹ்லுகானைக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்கள் விடுதலை யானவுடன், அவ்வழக்கின் விசாரணையில் இருந்த ஓட்டைகளைக் கண்டறிய ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அமர்வுநீதிமன்றத்தில் விடுதலை செய்யப் பட்டிருப்பதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடும் செய்திருக் கிறது. பசுவைக் கடத்தி வந்ததாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை செல்லாத தாக்குவதுதான் மாநில காங்கிரஸ் அரசுதங்கள் கொள்கையைக் காப்பாற்று வதற்கான நடவடிக்கையாக இருந்திடும்.
பெஹ்லுகான் கொலை வழக்கு நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக மாறியிருக்கிறது. ஏனெனில்இந்த வழக்கு நாட்டில் பசுப் பாது காப்புக்குழு என்ற பெயரில் குண்டர் கும்பலால் ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப் பட்ட நிகழ்வுகளில் ஒன்று என்பதனால் மட்டுமல்ல, மதவெறியர்கள் மேற்கொள்ளும் ஒரு வெறுப்புக் குற்றத்தின் கீழான அனைத்து மூலக்கூறுகளும் இதில் அடங்கியிருக்கின்றன. திட்டமிடப்படாத வன்முறை, சித்தாந்த ரீதியில் உணர்ச்சியைத் தூண்டிவிடுதல், சமூகத்தின்ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது சகிப்பின்மையை மேற்கொள்ளுதல், யார் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதில் தலையிடுதல் – என அனைத்தும் இந்த வழக்கில் பொதிந்திருக்கின்றன.இந்தக் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நிர்மூலமாக அனுமதிக்கப்பட்டுள்ள விதம், எந்த அளவிற்கு காவல்துறையினர் குண்டர் கும்பல்களுக்கு ஆதரவாக, தந்திரமான முறையில் திட்டமிட்டே செயல்பட்டு ஓட்டைகளை உண்டாக்கியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இப்போதைய மாநில அரசாங்கம் இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக ஏற்பட்டுள்ள கறையைச் சரிசெய்வதற்கு நேர்மையான முறையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையான கயவர்கள் வழக்கிலிருந்து வேண்டுமென்றே விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்குப் போதுமான சாட்சியம் இருக்குமானால், இவ்வழக்கில் கொலைபுரிந்தவர்களுக்கு எதிராக மீண்டும் விசாரணை மேற்கொள்வதற்கும் அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் முயற்சிக்க வேண்டும்.
நன்றி : தி இந்து, 1-11-2019 தலையங்கம்
தமிழில்: ச. வீரமணி