tamilnadu

img

மின்சார வாரிய ஊழியர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயலால் உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 01.12.2024 இரவு ஏற்பட்ட ஃபென்சல் புயலின்போது திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அண்டம்பள்ளம் மின்மாற்றியில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்யும் பணிக்காக வெறையூர் பிரிவிலிருந்து மின்பாதை ஆய்வாளர் பாலசுந்தர் (வயது 56) மற்றும் கம்மியர் அண்ணாமலை (வயது 56) ஆகிய இருவரும் சென்றனர்.

இருவரில் அண்ணாமலை பவித்திரம் தரைப்பாலத்தைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதைத் தொடர்ந்து அவரைத் தேடியதில் நேற்று (03.12.2024) பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மின்சார வாரிய ஊழியர் அண்ணாமலையின் உயிரிழப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கிடவும், அவரின் குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.