1928ல் நாகையில் ரயில்வே தொழிலாளர் போராட்டம் வெடித்தது. ஆலையை திருச்சிக்கு மாற்றுவதால் ஐயாயிரம் தொழிலாளர் வேலை போகும் என்பதால் ஏற்பட்ட கொதிப்பு. 10 நாள் போராட்டம் நீடித்தது. தமிழகம் முழுவதும் போராட்ட அலை வீசியது. பிரிட்டிஷ் ஆட்சி அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. டி.கிருஷ்ணசாமி, ம.சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் கையில் சிங்காரவேலரின் ‘தொழிலாளி’ பத்திரிகை அலுவலகம் குரங்கு கை பூமாலை ஆனது. பத்திரிகை முடக்கப்பட்டது. அந்த இதழில் கம்யூனிஸ்ட் அறிக்கை முதலில் ஒரு சிறு பகுதி வெளியிடப்பட்டதாகவும் ஏடு முடக்கப்பட்டதால் நின்று போனதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று உண்டு. ஒரு பிரதிகூட கிடைக்கவில்லை. பின்னர் பெரியார் முயற்சியில் குடியரசில் வெளிவந்தது. இந்தப் போராட்டத்தை பெரியாரும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது பிரிட்டிஷ் ரகசிய உளவுத்துறை கம்யூனிஸ்ட்டுகளே இப்போராட்டத்தின் பின்னால் இருந்து இயக்குவதாகவும்; ஆட்சியைக் கவிழ்க்கும் சதியின் ஒரு பகுதி என்றும் குற்றம்சாட்டியது.
“தென் இந்திய ரயில்வே சதி வழக்கு” என அறியப்பட்ட இவ்வழக்கில் லட்சுமணராவ் எனும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.கிருஷ்ணசாமி, சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார் ஆகியோருக்கு பத்தாண்டு சிறையும்; பெருமாள் என்கிற ரயில்வே தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை அதுவும் அந்தமான் சிறையில் எனத் தீர்ப்பாகியது. பத்தாண்டு சிறைத் தண்டனை குறைக்கப்பட்டாலும் பெருமாளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லை. அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட – முதல் தமிழர் ரயில்வே தொழிலாளி பெருமாளே ஆகும். வ.உ.சிக்கு பின் ஆயுள் தண்டனை பெற்றவரும் இவரே.அந்தமான் சிறைச் சித்ரவதையின் கொடூரத்தைக் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்தார்.
‘1937 மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து ராஜாஜி முதலமைச்சர் ஆனார். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.பெருமாளும் விடுதலையானார். சாவர்க்கரை பற்றி பேசும் எத்தனை பேர் பெருமாளை அறிவர்?