தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம்
புதுதில்லி,நவ.7- மருத்துவக்கல்வியை சிதைக்கும் நோக்கத்தில் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய பாஜக அரசு மசோதாவை கொண்டு வந்து, நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இம்மசோதாவுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டது. மருத்துவ கவுன்சிலின் பணி களை கவனிக்க அதே அதிகாரங்களுடன் நிர்வாகிகள் குழு (போர்டு ஆப் கவர்னர்ஸ்) அமைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2020-2021) தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு நிர்வாகிகள் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக நிர்வாகிகள் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவ ஆலோசனை கவுன்சில், 4 தன்னாட்சி வாரியங்கள் ஆகியவை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு சற்று தாமதம் ஆகும் என்று தோன்று கிறது. ஆகவே, வரும் கல்வி ஆண்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அப்படி வகுத்தால், 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தேசிய மருத்துவ ஆணையம் கட்டணம் நிர்ணயிக்க அந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளையே அடிப்படையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.