tamilnadu

img

பாண்டிச்சேரி தென்னிந்தியாவில் முதலில் உருவான கம்யூனிஸ்ட் இயக்கம் - என்.ராமகிருஷ்ணன்

1933ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்குவதற்காக அனுப்பப்பட்ட தோழர் அமீர் ஹைதர்கான் முதலில் சென்னைக்கு வந்தார். மிகுந்த சிரமப்பட்டு பல இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு மார்க்சியத்தை குறித்து எடுத்துக்கூறி கம்யூனிஸ்ட்டாக்கினார். அவர்களில் ஒருவர் பிரபல இளம் தேச பக்தர் பாஷ்யம் ஆவார். நள்ளிரவில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேய அரசாங்கத்தின் யூனியன் ஜாக் கொடியை கீழிறக்கி தேசியக் கொடியை பறக்கவிட்டவர் அவர். அதற்காக கடுங்காவல் தண்டனை அனுபவித்தவரும் கூட. இப்பொழுது அமீர் ஹைதர்கான் அவரிடம் தேசபக்தி மிக்க துணிச்சலான இளைஞர்கள் பற்றி கேட்டபொழுது அவர் பாண்டிச்சேரியில் உள்ள தன் நண்பர் வ.சுப்பையா பற்றி கூறியதும் அமீர் ஹைதர்கான் அவரை அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டார்.  வ.சுப்பையா பற்றி சிறிது கூற வேண்டியது அவசியம். அவர் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவராக இருந்தபொழுது மார்க்சிய சிந்தனையாளர் சிங்காரவேலர் எழுதிய நூல்களை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ‘லெனின் வரலாறு’ போன்ற சிங்காரவேலரின் நூல்கள்  சுப்பையா மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதேபோன்று ரஷ்யப் புரட்சி போன்ற நூல்களும் அவர் மனதைக் கவர்ந்தன. 

 அவர் பாண்டிச்சேரியில் ‘பிரஞ்சிந்திய வாலிபர் சங்கம்’, ‘ராமகிருஷ்ண வாசகசாலை’ போன்ற அமைப்புகளை உருவாக்கி மாணவர்களையும், இளைஞர்களையும் தேசிய இயக்கத்துக்கு ஆதரவாக திரட்டி வந்தார். மகாத்மா காந்தியினால் ஈர்க்கப்பட்டு ‘ஹரிஜன சேவா சங்கம்’ என்ற அமைப்பைத் துவக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் சேவை புரிந்தார். ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளராக செயல்பட்டபொழுது அவருக்கு புதுவை தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அந்த தொழிலாளி மக்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். குறைந்த கூலியில் அவர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது அவர் மனதை உறுத்தியது.  1934ல் மகாத்மாவை பாண்டிச்சேரிக்கு அழைத்து வந்து பெரும் வரவேற்பு கொடுத்தார். சுதந்திரப் போராட்ட இயக்கம் அவரை இளம் வயதிலேயே பாண்டிச்சேரியில் பெரிய தலைவராக்கியது. அச்சமயத்தில் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் போன்றவை பிரெஞ்சு நாட்டின் காலனியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது அமீர் ஹைதர்கான் கேட்டுக் கொண்டபடி தேச பக்தர் பாஷ்யம், சுப்பையாவை சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னை ராயப்பேட்டை இந்திய ஊழியர் சங்க கட்டிடத்தில் அச்சமயம் அமீர் ஹைதர்கான் தங்கியிருந்தார். அங்கே சுப்பையா அவரை சந்தித்துப் பேசினார். அன்று முழுவதும் ஹைதர்கான் மார்க்சியம் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் தொழிலாளி வர்க்கத்தை அரசியல்ரீதியாக திரட்டி வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார். இது சுப்பையாவை மிகவும் ஈர்த்தது. மார்க்சியம் தான் மனிதகுலத்தை வாழ்விக்கும், உயர்த்தும் என்ற கருத்து சுப்பையாவின் மனதில் ஆழப்பதிந்தது. மார்க்சியத்தை மேலும் தெரிந்துகொண்டு தொழிலாளி வர்க்கத்தை திரட்டும் பணியில் உறுதியாக ஈடுபடுவதாக சுப்பையா ஹைதர்கானுக்கு உறுதியளித்தார். அமீர் ஹைதர்கானுடன் இருந்த இளம் கம்யூனிஸ்ட் நரசிம்மன் என்பவர் சுப்பையாவுக்கு ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, ‘மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, ஜான்ரீடு எழுதிய ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ போன்ற நூல்களை கொடுத்தார். இவையும் சுப்பையாவை ஈர்த்தன.

மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட சுப்பையா 1934ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் ரகசியமாக கட்சிக்கிளையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். தென்னிந்தியாவில் முதலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கிளை  உருவாக்கப்பட்டது பாண்டிச்சேரியில்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர்தான் மலபாரிலும், சென்னையிலும், ஆந்திராவிலும் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் உருவாக்கப்பட்டன. பாண்டிச்சேரிக்கு வந்த சுப்பையா தொழிலாளர்களை திரட்டும் பணியில் இறங்கினார். அச்சமயத்தில் புதுச்சேரியில் ‘சவானா மில்’, ‘ரோடியர் மில்’ மற்றும் ‘கெப்ளே மில்’ ஆகியவற்றில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளிகள் வேலை செய்து வந்தனர். அவற்றில் வேலை செய்யும் தொழிலாளிகள் தினமும் 12 மணி நேரம் வேலைசெய்ய வேண்டியிருந்தது. சங்கம் வைக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது. சொல்லமுடியாத அடக்குமுறைகள், சமூகக் கொடுமைகளை அவர்கள் தினமும் சந்திக்க வேண்டியிருந்தது. சம்பளமோ குறைவு. இப்பொழுது சுப்பையா தினமும் மில் வாயில்களுக்குப் போய் அந்தத் தொழிலாளர்களிடம் அவர்களுடைய சிரமமான வாழ்க்கை நிலைமை, போதுமான குடியிருப்பு இல்லாதது, தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய அவல நிலைமை போன்றவற்றை விளக்கி அவர்கள் தங்கள் நல்வாழ்வுக்காக ஒன்றுபட்டு போராட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களை தொழிற்சங்க இயக்கத்தில் சேர்த்தார். சங்கத்திற்கு பல ஊழியர்கள் கிடைத்தனர். சுப்பையா அவர்களையும் கம்யூனிஸ்ட்டாக்கினார்.