அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், 2000 திருநங்கைகள் விடுபட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அசாமில் மாநிலத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 3 கோடி மக்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதில் 19 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தது. விடுபட்டவர்கள் வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது. இதில், 2000 திருநங்கைகள் பெயர்களும் விடுபட்ட நிலையில், இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இது குறித்து அசாம் மாநிலத்தின் முதல் திருநங்கை நீதிபதியும், மனுதாரருமான ஸ்வாதி பிதான் பருவா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தபோது, "அசாமில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெரும்பாலான திருநங்கைகள் பெயர் இடம்பெறவில்லை. 1971-க்கு முந்தைய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. மேலும், தேசிய குடிமக்கள் பட்டியலில் மூன்றாம் பாலினத்தவரை சுட்டிக்காட்ட தனியாக இடம் ஏதும் இல்லை. அவர்கள் ஆண் அல்லது பெண் என்ற இரு பாலினங்களையே தேர்வு செய்யும் வகையில் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்" என்றார்.