புதுதில்லி:
ரயில் சேவையைத் தனியார்மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஆனால் மறுபுறம் தனியார்மயத்திற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
முக்கிய நகரங்கள், சுற்றுலா தலங்களின் வழியாகச் செல்லும் சில ரயில்களின் இயக்கத்தைத் தனியார்மயமாக்க 100 நாள் திட்டம் ஒன்றை ரயில்வே அமைச்சகம் கடந்த வாரத்தில் வெளியிட்டது. அதுமட்டுமின்றி ரயில்வேக்கு உட்பட்ட 7 உற்பத்தி பிரிவுகள், பணிமனைகளை ரயில்வே ரோலிங் ஸ்டாக் கம்பெனி என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்க 100 நாள் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட சில ரயில்கள் தனியார் மயமாக்கப்படவுள்ளதாகக் கடந்த வாரத்தில் வெளியான செய்தியை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் மறுத்துள்ளார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுரேந்திரநாத் தாகூர், “ராஜ்தானி சதாப்தி ரயில்களைத் தனியார் மயமாக்கும் திட்டம்குறித்து வெளியான செய்தி உண்மையா? தனியார் மயமாக்கினால் கட்டணத்தைத் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் உயர்த்து வதை அரசு எப்படிக் கட்டுப்படுத்தும்?” என்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பியூஷ் கோயல், “ராஜ்தானி, சதாப்தி ரயில்களைத் தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை. ரயில்வே துறையை தனியார் மயமாக்க எந்தத் திட்டமும் இல்லை” என்றார். ரயில்வேயில் அடுத்து நிரப்பப்படவுள்ள 9000 பணியிடங்களில் 50 சதவிகிதத்தைப் பெண்களுக்கு ஒதுக்கவுள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், “ரயில்வேயில் கான்ஸ்டபிள், சப் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நிரப்பப்படவுள்ள 9,000 பணியிடங்களில் 50 சதவிகிதப் பணிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஆனால் உண்மை விவரங்களை தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) அம்பலப்படுத்தியுள்ளது.ஆகஸ்ட் 31 முடிய 100 நாட்களுக்கான ரயில்வேத்துறையின் செயல் திட்டத்தால் இந்திய ரயில்வேக்குத் தேவையான என்ஜின்கள், ரயில்பெட்டிகள், உதிரிபாகங்கள் தயாரித்து வரும் ஏழு ரயில் உற்பத்தி நிறுவனங்கள் தனி லாபம் ஈட்டும் ‘பொதுத்துறை’ நிறுவனங்களாக மாற்றப்படும் நிலை உருவாகி உள்ளது. அவ்வாறு மாற்றப்பட்டால் என்ஜின்கள், ரயில்பெட்டிகள், உதிரிபாகங்கள் லாப நோக்கத்தில்தான் விற்கப்படும். அவற்றை அதிக விலை கொடுத்து ரயில்வே வாங்க நேரிடும். மேலும் காலப்போக்கில் இந்நிறுவனங்கள் அனைத்தும் இந்தி்ய பெருமுதலாளிகள் கட்டுப்பாட்டில் சென்றுவிடக்கூடிய அபாயமும் உள்ளது.
ஆகஸ்ட் 31 முடிய 100 நாட்களுக்கான ரயில்வேத்துறையின் செயல் திட்டத்தை வாரியசேர்மன் வி.கே யாதவ் ஜூன் 18 அன்று அறிவித்தார். இதில் ஏழு ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றி தலைமை நிர்வாக அதிகாரிகளின் (சி.இ.ஒ) கீழ், இந்திய ரயில்வே ரோலிங் ஸ்டாக் கம்பெனி என்ற பெயரில் தனித்தனி லாபநிறுவனங்களாக இயக்கும் திட்டம் இடம்பெற்று உள்ளது.அந்திய செலாவணி கையாளும், அதிக லாபம் ஈட்டும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிறுவனங்களாக இவை உருவெடுக்கும். இதனால் பங்கு சந்தையில் இந்த நிறுவனங்களை பட்டியல்படுத்தி இவற்றின் பங்குகளை விற்பனை செய்ய முடியும்.
சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ்
இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ், 1950 ம் ஆண்டு நீராவி என்ஜின் உற்பத்தியையும் 1961-ம்ஆண்டு மின்சார என்ஜின்கள் உற்பத்தியையும் 1993-ம் ஆண்டு முதல் டீசல் என்ஜின்கள் உற்பத்தியையும் துவக்கியது. ஆண்டு சராசரிஉற்பத்தி 270 என்ஜின்கள். இதன் சொத்து மதிப்பு ரூ.848 கோடி. மணிக்கு 160 கி.மீ வேகம் மற்றும் 4500 குதிரைத் திறன் பயணிகள் ரயில் என்ஜின்கள், 5500 குதிரைத் திறன் சரக்கு ரயில்என்ஜின்கள் தயாரிக்கிறது. செனகல் ,மலேசியா, மியான்மர், இலங்கை, வியட்நாம் என பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. ஈரான் நாடு 200 என்ஜின்கள் கோரி இருக்கிறது. கடந்த 2018 ம் ஆண்டு உற்பத்தியான என்ஜின்கள் 321 . நிதியாண்டு 2016-17 ரயில்வே அல்லாத நிறுவனங்களிடம் விற்பனையில் ஈட்டிய தொகை ரூ.185 கோடி. இந்நிறுவன சொத்து மதிப்பு ரூ.746 கோடி.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலை
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலை டெமு ரயில்கள், டிரெயின் 18, எல்.எச்.பி என பலரக பெட்டிகள் உற்பத்தி செய்வதோடு, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. வருட உற்பத்தி சுமார் 3000 பெட்டிகள். 2016-17 நிதியாண்டு ரயில்வே அல்லாத நிறுவனங்களிடம் விற்பனையில் ரூ. 1251 கோடி ஈட்டியது. இதன் சொத்து மதிப்பு ரூ. 2442 கோடி.வாரணாசி டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ்வாரணாசியில் அமைந்துள்ள இந்திய ரயில்வேயின் டீசல்-எலக்ட்ரிக் பெட்டிகளை யும் அவற்றுக்கான உதிரிபாகங்கள் அனைத்தையும் உற்பத்தி செய்யும் மிகப்பெரும் டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனம் வாரணாசியில் அமைந்துள்ளது. இது ஒரு பிரம்மாண்டமான நிறுவனம். உலகத்தரம் வாய்ந்த, குறைந்த விலையிலான ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதில் வல்லமை படைத்த நிறுவனம்.
கபுர்தாலா ரயில் கோச் தொழிற்சாலை
கபுர்தாலா ரயில் கோச் தொழிற்சாலை, டபுல்டெக்கர், தூரந்தோ, சதாப்தி, தேஜாஸ், பெட்டிகளை தயாரித்து, இந்திய ரயில்வேக்கு வழங்குவதோடு செனகல், மாலி, மியான்மர் நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. ஆண்டு சராசரி உற்பத்தி 1500 பெட்டிகள். 2016-17 நிதியாண்டு ரயில்வே அல்லாத நிறுவனங்களிடம் விற்பனையில் ஈட்டியது ரூ.248 கோடி. இதன் சொத்து மதிப்பு ரூ.1277 கோடி. பாட்டியாலா, டீசல் லோகோ மார்டனைசேஷன் ஒர்க்ஸ் பாட்டியாலா, டீசல் லோகோ மார்டனைசேஷன் ஒர்க்ஸ் தொழிற்சாலை பழைய டீசல் என்ஜின்கள் புனரமைப்பு மற்றும் நவீனமய பணிகள் மேற்கொள்கிறது. ஆண்டுக்கு 60 அல்கோ வகை என்ஜின்கள் மற்றும் 1700 ஏ.சி மின்சார என்ஜின். மோட்டார்கள் தயாரிக்கிறது. இதன் சொத்து மதிப்பு ரூ.1895 கோடி.
பெங்களூரு ரயில் வீல் தொழிற்சாலை
பெங்களூரு ரயில் வீல் தொழிற்சாலை, ஆண்டுக்கு ஒரு லட்சம் அச்சு மற்றும் இரண்டுலட்சம் சக்கரங்கள் தயாரிக்கிறது. 2016-17 நிதியாண்டு ரயில்வே அல்லாத நிறுவனங்களிடம் விற்பனையில் ரூ. 37 கோடி ஈட்டியது. இதன் சொத்து மதிப்பு ரூ. 1300 கோடி.ரேபரேலி மார்டன் கோச் பேக்டரி 2012 ம் ஆண்டு உற்பத்தியை துவங்கிய ரேபரேலி மார்டன் கோச் பேக்டரி அந்தியோதயா, ஹம்சாபர், தீன்தயாளு, எல்.எச்.பி என பல வகைப் பெட்டிகளை தயாரிக்கிறது. கடந்த நிதியாண்டு தயாரிப்பு 1425 பெட்டிகள். இதன் சொத்து மதிப்பு ரூ. 2669 கோடி. மோடி அரசின் புதிய திட்டத்தால் மேற்கண்ட ஏழு ரயில் உற்பத்தி நிறுவனங்களும் தனி லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களாக மாறும். இவை என்ஜின்கள், ரயில்பெட்டிகள், உதிரிபாகங்கள் உள்ளிட்ட வற்றை லாப நோக்கத்தில் ரயில்வேயிடம் விற்பனை செய்யும். இதனால் ரயில்வே வாரி யம் கூடுதல் தொகை செலவிட நேரிடும். மேலும் என்ஜின்கள், பெட்டிகள் பராமரிப்பிற்கு கட்டணமும் கோரும். ரயில்வேயின் ரத்தமும் சதையுமாக உள்ளஇந்நிறுவனங்களைப் பறிப்பதே, ரயில்வேயின் உயிரை எடுப்பது போன்றதுதான். பிரித்தால் எளிதாக விற்க முடியும்.அதைத்தான் செய்கிறது மத்திய அரசு.
தகவல்கள் உதவி - ஆர்.மனோகரன்,
துணைப் பொதுச் செயலாளர், டிஆர்இயு