அகமதாபாத்:
படேல் சிலை வளாகத்தில், அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளையொட்டி, மண் அள்ளியதில் ரூ. 7 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்திலுள்ள சர்தார் சரோவர் அணையின் அருகே, ரூ. 3 ஆயிரம் கோடி செலவில், 597 அடி உயரத்தில் படேலுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சிலை என்ற அறிவிப்புடன் கடந்த ஆண்டு பிரதமர் மோடி இதனைத் திறந்து வைத்தார். இந்நிலையில்தான், படேல் சிலை வளாகத்தில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளையொட்டி, மண் அள்ளியதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நர்மதா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. படேல் சிலை வளாகத்தில், சுமார் 4.5 மெட்ரிக் டன் அளவிற்கு மண் திருடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 7 கோடி என்று புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையிலும், மண் அள்ளியதில் ஊழல் நடந்திருப்பது நிரூபணமாகியிருக்கிறது.