இந்தூர்:
கொரோனாவுக்கு எதிர்ப்புமருந்து தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்தியாவிலும் ஐசிஎம்ஆர் ஒருங்கிணைப்பில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் கார்ப்பரேட் சாமியாரான ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனமும், கொரோனா பாதிப்புக்கான சிகிச்சை மருந்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத ஆராய்ச்சிக் கழகத் தலைவர் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.இந்த ஆய்வுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதியளிக்க மறுத்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், பதஞ்சலி குழுமம், இந்திய மருத்துவ சோதனை ஒருங்கிணைப் பாளர் அலுவலகத்தில் பதிவுசெய்து, ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒருதுறையின் மூலம் சோதனைகளில் ஈடுபட்டுள்ளது. சுமார் 500 ஆராய்ச்சியாளர்களையும் ஆய்வில் இறக்கி விட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் சிங்-தான், ‘பதஞ்சலி’ நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக குற்றம் சாட்டியிருக்கும் அவர். “மருந்துக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வழிமுறைகள் குறித்து ஆட்சியர் அறிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது. தங்களுக்கு நெருக்கமான நபர்களுக்காக நாட்டு மக்களை கினியா பன்றிகளை போல் நடத்தக் கூடாது”என்று கடுமையாக சாடியுள் ளார்.