புதுதில்லி:
2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள வரைவு விதிகளுக்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதைவிலக்கிக் கொள்ள வேண்டும் எனமத்தியத் தொழிற்சங்கங்கள், பிரதம ருக்குக் கடிதம் எழுதியுள்ளன.
மத்தியத் தொழிற்சங்கங்கள் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச மற்றும் சங்கங்கள் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையாகிய நாங்கள், 2020 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டத்திற்காக முன்மொழியப் பட்டுள்ள வரைவு விதிகளுக்கு எங்கள்எதிர்ப்பினை வெளிப்படுத்திக் கொள்கிறோம். இந்தத் திருத்தங்கள், சர்வதேச புவிவெப்பமயமாதல் ஒப்பந்தத்திற்கு எதிரானதாகவும், நம் நாட்டிலும் சுற்றுச்சூழல் கூருணர்வு மிக்க மண்டலங்களின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றன. 2020 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டம், 2006ஆம் ஆண்டு சட்டத்திலிருந்து முற்றிலுமாக மாற்றுப்பாதையில் செல்கிறது. இது வர்த்தகரீதியான தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கும், இதரகனிமவள நிர்வாக மேலாண்மைக்கும் அரசாங்கத்தின் நிலங்களை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் தாரை வார்த்திடும் ஒன்றாகவே தோன்றுகிறது.
சுற்றுச்சூழல் நிலைமைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்தான் பல்வேறு வடிவங்களிலான இயற்கைப்பேரிடர்களுக்குக் காரணம் ஆகும். கார்ப்பரேட்டுகளின் பேராசை நடவடிக்கைகள், எவ்விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும் எடுக்காமல், மனிதகுலத்திற்கு அழிவினை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இயற்கையை சூறையாடுவதற்கு இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல, நாட்டின்உறுதியான நிலையான வளர்ச்சிக்கும் உதவாது. இந்தியா, உலக நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு (World Sustainable Development Goals) உறுதி பூண்டிருக்கிறது. இப்போது அரசால் முன்மொழியப்பட்டுள்ள வரைவு இதற்கு எதிரானதாகும். மேலும் இதனால் பாதிக்கப்படுவோர், சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் வடுப்படத்தக்க நிலையில் உள்ள பழங்குடியினராவார்கள்.எனவே, இந்த விதிகள் முன்மொழிவை நாட்டு மக்கள் நலன் கருதியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வலுவானமுறையில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளன. இதன் நகலை, சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் புவிவெப்பமயமாதல் அமைச்சர், பிரகாஷ் ஜவடேகருக்கும் அனுப்பியுள்ளனர். (ந.நி.)