ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நேற்று (ஞாயிறு அன்று) காட்டுமிராண்டித்தனமான முறையில் தடியடி, தாக்குதல் நடத்தியிருப்பதை இன்று (திங்கள் கிழமை) எதிர்க்கட்சியினரும் கண்டித்துள்ளனர். ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து, தில்லிப் பல்கலைக் கழக மாணவர்கள் இன்று தில்லிப் பல்கலைக் கழக வடக்கு வளாகத்தில் (நார்த் காம்பஸ்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மை என்னும் கொடுங்கோன்மையைக் கொண்டு பாஜக அரசாங்கம் குடியுரிமை சட்டத்தைத் திருத்தியிருப்பதைக் கண்டித்து நாடு முழுதும் கண்டன முழக்கங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றையதினம் காவல்துறையினர் ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தடியடிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இதனை எதிர்க்கட்சியினர் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். தில்லி காவல்துறை மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வருவதால் இது தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) குடியரசுத் தலைவரைச் சந்தித்திடவும் திட்டமிட்டுள்ளனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தைத் தங்கள் மாநிலங்கள் பின்பற்றாது என்று ஏற்கனவே உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள்.
ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாதக் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கண்டித்துள்ளன. இத்தாக்குதலைக் கண்டித்தும், மாணவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் நாடு முழுதும் ஆதரவு இயக்கங்கள் நடந்து வருகின்றன.
காவல்துறையினர் ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து பல்கலைக் கழக நிர்வாகத்தினர், காவல்துறையினர் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர் என்று கூறினார்கள். நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களைக்கூட காவல்துறையினர் வெளியே இழுத்து வந்து தாக்கியதாக மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள காணொளிகளில் கழிப்பிடங்களில்கூட மாணவர்கள் தாக்கப்பட்டிருப்பதும், நினைவுதவறி படுத்திருப்பதும் தெரிகின்றன.
உள்நாட்டு யுத்தம் போன்று காட்சி அளிக்கிறது
ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற அனைத்து எதிர்க்கட்சியினர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “ஜமியாவில் நடைபெற்றவற்றிற்கு முதற்கண் நாங்கள் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். இதனை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. யாருடைய கட்டளைக்கிணங்க காவல்துறையினர் பல்கலைக் கழக வளாகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தார்கள் என்பதை இந்த அரசாங்கம் விளக்கிட வேண்டும். பல்கலைக் கழக நிர்வாகத்தினர் காவல்துறையினர் உள்ளே வருவதைக் கடுமையாக எதிர்த்தபோதிலும் அதனை மீறி அவர்கள் உள்ளே நுழைந்திருக்கின்றனர். காவல்துறையினருக்கு நேரடி பொறுப்பு வகிப்பவர் உள்துறை அமைச்சர். அவர் எங்கே?
பாஜகவின் தத்துவார்த்த சிந்தனையின் கீழான நடவடிக்கைகளின் விளைவாக தில்லியில் உள்ள மூன்று மத்தியப் பல்கலைக் கழகங்களும் இன்றைக்கு ஒரு கொந்தளிப்பு நிலைக்கு ஆளாகியிருக்கின்றன. பகுத்தறிவுச்சிந்தனையை வளர்த்திடும் உயர்கல்வி நிலையங்களை அவர்கள் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியிருக்கின்றனர். மத்திய ஆட்சியாளர்களின் இத்தாக்குதலுக்கு எதிராக நாடு முழுதும் கிளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று கூறினார்.
து. ராஜா
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து. ராஜா கூறுகையில், “நான் நேற்றிரவு போலீஸ் தலைமைகத்தில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்களுடன் இருந்தேன். தில்லிப் பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மற்றும் ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளமானவர்கள் அங்கே இருந்தனர். காவல் துறை அதிகாரிகள் மாணவர் சங்கப் பிரதிநிதிகளிடம் காயமடைந்த மாணவர்களுக்கு போதுமான அளவு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். நாட்டில் ஓர் உள்நாட்டு யுத்த நிலைமை போன்று இருக்கிறது,” என்று கூறினார்.
மாணவர்களின் கிளர்ச்சிகள் தொடர்வதன் காரணமாக தில்லி மெட்ரோ ரயில் கழகம், ஜமியா மிலியா இஸ்லாமிய்யா மெட்ரோ ஸ்டேஷனை மூடிவிட்டது. ரயில்கள் அங்கே நிற்காது என்று தெரிவித்துள்ளது.
(ந.நி.)