தில்லி
இந்தியாவிலிருந்து கொரோனாவை விரட்ட மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் கொரோனா வைரஸ் என் வழி தனி வழி என்ற நோக்கில் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் 23 ஆயிரத்து 77 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 718 பேர் பலியாகியுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் அதிக சேதாரத்தைச் சந்தித்து வருகிறது.
அங்கு இதுவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு 238 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் குஜராத், தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொரோனாவால் பலத்த பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பில்லா மாநிலங்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்கள் இருந்த நிலையில், புதிதாகத் திரிபுரா இந்த பட்டியலில் நுழைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.