tamilnadu

img

ஜிடிபியில் வளர்ச்சி அல்ல; 5 சதவிகித வீழ்ச்சி ஏற்படும்.....

புதுதில்லி:
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என்று ‘எஸ் மற்றும் பி குளோபல் நிறுவனம்’ (S&P Global) மதிப்பீடு செய்துள்ளது.இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 40 சதவிகிதம் வீழ்ச்சியை காணும் என்று எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கை ஏற்கெனவே கூறியிருந்தது. மேலும் இந்த ஆய்வறிக்கை 2021 நிதியாண்டில் 6.8 சதவிகிதம் சுருங்கலாம் என்று தெரிவித்தது.இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில்- மார்ச் 31 வரை இந்திய பொருளாதாரம் 5 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என்று ‘எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம்’ மதிப்பீடு செய்துள்ளது.

இந்தியா 1951-ஆம் நிதியாண்டில் இருந்து, இதுவரை 5 முறை பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 1957-1958-ம் நிதியாண்டில் 0.4 சதவிகிதம் 1965-1966 வரை 2.6 சதவிகிதம் 1966-1967-ல் 0.1 சதவிகிதம் 1972-1973-ல் 0.6 சதவிகிதம் 1977-1980-ல் 5.2 சதவிகிதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது.இவற்றுக்கு அடுத்தபடியாக தற்போது 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று அந்த குழு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.நிரந்தர பொருளாதார இழப்பு மற்றும் இருப்பு நிலையில் சரிவு ஆகிய காரணங்களாலேயே, இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்றும் ‘எஸ் அண்ட் பி குளோபல்’ தெரிவித்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதில் 1.2 சதவிகிதம் நேரடி தூண்டுதல் நடவடிக்கையை கொண்டுள்ளது. மீதியுள்ள 8.8 சதவிகிதம் பணப்புழக்க ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் கடன் உத்தரவாதங்கள் ஆகியவை வளர்ச்சியை நேரடியாக ஆதரிக்காது.அதே நேரத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று அந்த நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. 6.5 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக வளர்ச்சி விகிதம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.