புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம்,கோரக்பூர் பிஆர்டி மருத்துவ மனையில், கடந்த 2017-ஆம் ஆண்டு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்தனர். அப்போது, சொந்தசெலவில் ஆக்சிஜன் சிலிண்டர்வாங்கி, ஏராளமான குழந்தை களின் உயிரைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல் கான் ஆவார்.
ஆனால், உத்தரப்பிரதேச பாஜக அரசு, கபீல்கான் மீதே குழந்தைகள் இறப்புக்கான பழியைத் தூக்கிப் போட்டு, அவரை சிறையில் அடைத்தது. பின்னர் விசாரணையில் கபீல் கான் குற்றமற்றவர் என்பது நிரூபணமானது.எனினும் உத்தரப்பிரதேச பாஜக அரசு, கபீல்கானை விடுவதாக இல்லை.குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, 2019 டிசம்பர் 13-ஆம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில், டாக்டர் கபீல்கான் பங்கேற்றுப் பேசிய நிலையில், அவரது உரை இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததாக கூறி, சட்டப்பிரிவு 153A-இன் கீழ் உ.பி. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 40 நாட்கள் வரை கைது நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாத அவர்கள், கபீல்கான் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்காக மகாராஷ்டிரா சென்ற நேரத்தில் திடீரென பின்தொடர்ந்து சென்று கைது செய்தனர். மதுரா சிறையிலும் அடைத்தனர்.இந்த வழக்கில் கபீல்கானுக்குநீதிமன்றம் திங்கட் கிழமையன்று ஜாமீன் வழங்கியது. ஆனால் அவரைச் சிறையிலிருந்து விடுதலை செய்யாத ஆதித்யநாத் அரசு, கபீல்கான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டு, மீண்டும் சிறையில் அடைத்துள்ளது.