tamilnadu

குண்டர் கும்பல் கொலைகள் புரிவதற்கு முற்றுப்புள்ளி வைத்திட முஸ்லீம்கள் முன்னணி கோரிக்கை

தலித்துகள், முஸ்லீம்கள் குண்டர் கும்பல்களால் கொல்லப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று அகில இந்திய ஐக்கிய முஸ்லீம்கள் முன்னணி கோரி வியாழன் அன்று புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் (ஜந்தர்மந்தரில்) ஒரு நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

மேலும் இப்பேரணி/ஆர்ப்பாட்டத்தின்போது, தலித் முஸ்லீம்களை, தலித்/பழங்குடியினர் சட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். முஸ்லீம்கள் முன்னணி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அயோத்தி தாவா போன்றே, தலித் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திடும் பிரச்சனையும் உச்சநீதிமன்றத்தில் 1949, 1950களிலிருந்தே எவ்வித இறுதி முடிவும் மேற்கொள்ளப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இப்பிரச்சனைகளில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பினை அளித்திடாவிட்டால் அது தலித் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும் என்று முஸ்லீம் முன்னணியின் ‘துணைத் தலைவர் கமால் அஸ்ரப் தெரிவித்தார். குண்டர் கும்பல்கள் கொலைகள் புரிவது என்பதுமு இந்தியாவில் மதவெறி அரசியலை முன்னெடுத்துச் சென்றிட மதவெறி சக்திகள் மேற்கொண்டுவரும் “புதிய உத்தி” என்று முஸ்லீம் முன்னணியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஹபிஸ் குலாம் கூறினார்.

(ந.நி.)