புதுதில்லி:
மத்திய பாஜக அரசானது, முழுக்க முழுக்க வலதுசாரி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 70 ஆண்டு கால இந்திய குடியரசின் ஜனநாயக மாண்புகளையும், மதச்சார்பற்ற அரசியல் விழுமியங்களையும், அணிசேரா நிலைபாட்டையும் குழிதோண்டி புதைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 நீக்கம், மத அடிப்படையில் கொண்டுவரப் பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம்,மத அடிப்படையில் வெளியுறவு விவகாரங்களை கையாளுதல், குறிப்பாக அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மட்டுமன்றி, வங்கதேசத்துடனும் கூட முரண்படுதல், பாலஸ்தீன விவகாரத்தில் இவ்வளவு காலமும் இல்லாத வகையில் இஸ்ரேலுடன் இணக்கம்காட்டுதல் என்று அது போய்க் கொண்டிருக்கிறது.இந்நிலையில்தான், நெல்சன் மண்டேலா போன்ற விடுதலைப் போராளிகள், ஜனநாயகவாதிகளால் அலங்கரிக் கப்பட்ட இந்திய குடியரசு தின விழாவின் மாண்பையும் மோடி அரசு காவு கொடுத்துள்ளது.இந்தியாவின் 71-ஆவது குடியரசுத்தின விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக, ஒரு தீவிர வலதுசாரியும், கடைத்தெடுத்த பிற்போக்காளருமான பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோ-வை,அழைத்து வந்ததன் மூலம் அதனை மோடி அரசு செய்துள்ளது.பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் 11-வது உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. 2 நாள் நடைபெற்ற மாநாட்டுக்கு இடையே பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார்.
அப்போது விடுக்கப்பட்ட அழைப்பைஏற்றுத்தான், 71-ஆவது ஆண்டுக்கான இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக ஜெய்ர் போல்சானரோ தில்லிக்குவந்துள்ளார்.பிரதமர் மோடி போகிற போக்கில், இந்த அழைப்பை விடுத்ததாக பார்க்க முடியாது. ஆர்எஸ்எஸ்- பாஜகவின் சனாதன சித்தாந்தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் போல்சானரோ. பத்துப் பொருத்தங்களும் அப்படியே பொருந்தக் கூடியவர். ஆர்எஸ்எஸ் - பாஜகவைப் போல, பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடி மக்கள், விளிம்புநிலையினர், அகதிகள் என - இவர்கள் யாரையுமே பிரேசில் ஜனாதிபதி போல்சானரோவுக்கு ஆகாது. “உன்னை பாலியல் வன்கொடுமை செய்யமாட்டேன். நீ அதற்கு தகுதியானவள் கிடையாது”- என்று நிச்சயமாக ஒருநாட்டின் தலைவர் பேசமாட்டார். ஆனால்பிரேசில் ஜனாதிபதி போல்சானரோ, பேசிய பேச்சுதான் இது. 2003-ஆண்டின் போது, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்ஒருவரைப் பார்த்து இவ்வாறு பேசிய போல்சானரோ, கேமிராக்களின் முன்னிலையிலேயே அந்த பெண் உறுப்பினரின்மார்பில் கை வைத்து தள்ளியும் விட்டார்.பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியைக் கிண்டலடித்ததுடன், பெண் பத்திரிகையாளர் ஒருவரையும் தரக்குறைவாக விமர்சித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, “போலீஸ் விசாரணையில் சித்ரவதைசெய்யும் முறையை சட்டப்பூர்வமாக்குவோம்” என்று போல்சனாரோ வாக்குறுதி அளித்ததும், “என் மகன் தன்பாலின ஈர்ப்பாளர் என்று தெரிந்தால், அவன் மீது எனக்கு பாசம் இருக்காது. அவன் வாழ்வதற்கு பதிலாக சாகலாம்” என்றதும் பிரேசிலில் பிரபலமான நிகழ்வுகளாகும்.கடந்த காலத்தில் சர்வாதிகார ஆட்சியில் பிரேசிலின் எந்த பிரச்சனையும் தீர்க்கப்படவில்லையே என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு “போதுமான அளவுக்கு ராணுவம் மக்களைக் கொல்லாததே அதற்கு காரணம். இன் னும் ஒரு முப்பதாயிரம் மக்களைக் கொன்றிருக்க வேண்டும்” என்று போல்சானரோ பேசியபோது உலகமே அதிர்ச்சி அடைந்தது.
அப்படிப்பட்ட ஒருவரைத்தான், பழங்குடி மக்களுக்கு எதிராக, அமேசான் காடுகளுக்கு தீ வைத்த ஒரு குரூரமான பேர்வழியைத்தான்- இந்திய குடியரசு தின சிறப்பு அழைப்பாளராக மோடி அரசு அழைத்து வந்துள்ளது. ஒரு வலதுசாரி பிற்போக்காளரை மனிதகுல விரோதியை மேடையில் ஏற்றி, இந்திய குடியரசுத் தின விழாவை சிறுமைப்படும் நிலைக்கு தள்ளியுள்ளது.போல்சானரோவின் அனைத்து குரூரங்களும், பிற்போக்குத்தனங்களும் மத்திய பாஜக அரசுக்கு அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியவைதான். எனினும், குடியுரிமைத் திருத்தச் சட்டம்கொண்டுவந்து, சொந்த மக்களையே அகதிகளாக்கி வதைமுகாமில் அடைக்க முயற்சி மேற்கொண்டிருக்கும் மோடி அரசுக்கு, அகதிகளை ‘பூமியின் கழிவுகள்’ என்று போல்சனாரோ அழைத்தது, ஒரு உடனடி ஈர்ப்பை அளித்திருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.