tamilnadu

img

லவாசாவை திட்டமிட்டு வெளியேற்றிய மோடி அரசு? தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவதை தடுத்தது

புதுதில்லி:
இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசாவை, திடீரென ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank- ADB) துணைத்தலைவராக மோடி அரசு நியமித்திருப்பது, அவர் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவதைத் தடுப்பதற்கான முயற்சி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் சுனில் அரோரா-வுக்கு அடுத்து அப்பதவிக்கு வர இருந்தவர் அசோக் லவாசா. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் ஆணையமே பாஜக சார்பு நிலை எடுத்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரின் தேர்தல் பிரச்சாரம், சாதி, மத பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன; இவை தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறு வதாகும் என்று துணிந்து கண்டித்தவர் அசோக் லவாசா. தனது கருத்தை சக ஆணையர்கள் கொஞ்சம்கூட பரிசீலனைசெய்ய மறுக்கிறார்கள் என்றும், ஆளும் கூட்டத்திற்கு அவர்கள் துணைபோகும் வரை, தேர்தல் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், கெடுவாய்ப்பாக பாஜக-வே மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், அசோக் லவாசா குறிவைக்கப் பட்டார். லவாசாவின் மனைவிக்கு வருமானத்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. லவாசாவின் மகன் அபிர் லவாசா மற்றும் அவர் இயக்குநராக இருக்கும் நிறுவனம் மீது அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டி, பயமுறுத்தல்கள் செய்யப்பட்டன.அதன் தொடர்ச்சியாகவே, அசோக் லவாசா திடீரென தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.லவாசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு ஆண்டு பதவிக் காலம் இருந்தது. அரோராவுக்குப் பின், தலைமைத் தேர்தல் ஆணையராகி, அதன்பிறகே அக்டோபர் 2022-இல் லவாசா ஓய்வுபெற வேண்டும். ஆனால் அது நடந்துவிடக் கூடாது என்ற பதைப்பிலேயே ஆசிய வளர்ச்சிவங்கி பதவி அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படு கிறது. ஏனெனில், லவாசா தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருக்கும்போதே, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும். இது தங்களுக்கு நல்லதல்ல! என்று பாஜக கருதுவதாக கூறப்படுகிறது. அதற்காகவே முன்கூட்டியே லவாசாவை- அவரது ‘ஒப்புதலுடன்’ தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேற்றி விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.தேர்தல் ஆணையத்தின் வரலாற்றில், பதவிக் காலம் முடியும் முன்பே ஆணையர் ஒருவர் பதவியில் இருந்து வெளியேறுவது 1973-க்குப் பிறகு இதுதான் முதல்முறை.1973 ஆம் ஆண்டில், தலைமைத் தேர்தல் ஆணையர் நாகேந்தர் சிங், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பு ராஜினாமா செய்தார். அதற்கு அடுத்ததாக அசோக் லவாசாதான், பதவிக்காலம் முடியும் முன்பே வெளியேற்றப்பட்டு உள்ளார்.

“நேர்மையானவர்களை வெளியேற்றும் அல்லது காயப்படுத்தும்- தடைகளை உருவாக்கும் சமூகம், அதன் சொந்த அழிவுக்கான பாதையை உருவாக்குகிறது” என லவாசா முன்பொரு முறை, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.எனினும், தற்போது தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பாக ஊடகங்களிடம் பேச மறுத்துள்ள லவாசா செப்டம்பர் மாதம், புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.