tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் கர்நாடக அரசு... கடைசி நேரத்தில் சிறப்பு ரயில்களை ரத்து செய்து துரோகம்

பெங்களூரு:
கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி, தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் முயற்சியில் மத்தியப்பிரதேசம், குஜராத் மாநில பாஜக அரசுகள் இறங்கியிருக் கின்றன. தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலைபார்த்தாக வேண்டும் என்று அந்த அரசுகள் உத்தரவும் போட்டுள்ளன. 

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் செல்ல விடாமல், அவர்களை ரியல் எஸ்டேட்முதலாளிகளுக்கு கொத்தடிமையாக்கும் வேலையை கர்நாடக மாநில பாஜக அரசு செய்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த மூன்றுகட்ட ஊரடங்கிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பல்வேறு மாநிலங்களில் இருக்கும்புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். பட்டினியும், பசியுமாக இருக்கும் அவர்கள் எப்படியாவது சொந்த ஊருக்குசென்றுவிட வேண்டும் என தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த வாரம் இது பெரும்பிரச்சனையாக உருவெடுத்தநிலையில், தற்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக் கென சிறப்பு ரயில்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.அந்த வகையில், கர்நாடக மாநிலத்திலும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தொழிலாளர்களும் சொந்த ஊருக்குத் திரும்ப ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் ரயில்கள் கிளம்ப இருந்த நிலையில், எடியூரப்பாதலைமையிலான கர்நாடக மாநில பாஜக அரசு, திடீரென அந்த சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக தென்மேற்கு ரயில்வே பொது மேலாளருக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், “5 நாட்களுக்கு தினசரி 2 சிறப்பு ரயில்களைஇயக்க வேண்டும் என்று ஒரு கடிதம் அனுப்பியிருந்தோம். மே 6-ஆம் தேதி மட்டும் காலை 9, 12 மற்றும் பிற்பகல் 3 மணிக்கு என மூன்று ரயில்களை பெங்களூருவில் இருந்துபீகாரின் தனபூருக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தோம். இந்த வேண்டுகோளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இது, பெங்களூவில் வசிக்கும் 2 லட்சத்து 40 ஆயிரம்பேர் உட்பட கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் பல லட்சம்புலம்பெயர் தொழிலாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.முதல்வர் எடியூரப்பாவை, சில கட்டுமான நிறுவன முதலாளிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் நேரில் சந்தித்துப்பேசியதாகவும், அதன்பிறகே ரயில்கள் ரத்து முடிவை,கர்நாடக அரசு எடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளனர்.அதாவது, “ஊரடங்கு காலகட்டத்தில், தாங்கள் சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வசதி ஏற்படுத்திக் கொடுத்தோம்; தற்போது தொழில் துவங்கக் கூடிய நேரத்தில் அவர்களை ஊருக்கு அனுப்பினால், நாங்கள் தொழிலை நடத்த முடியாது என்று கட்டுமான நிறுவன முதலாளிகள், எடியூரப்பாவிடம் கூறியதாகவும், அவரும் முதலாளிகளுக்கு சாதகமாக சிறப்பு ரயில்களை ரத்து செய்து விட்டார்” என்றும் விவாதங்கள் முன்னுக்கு வந்துள்ளன.வெண்ணை திரளும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக, பாஜக அரசின் துரோகத்தை நினைத்து நொந்துபோன புலம்பெயர் தொழிலாளர்கள், தற்போது நடந்தேகூட சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர். தற்போதே நூற்றுக்கணக்கானோர் பெங்களூருவிலிருந்து நடக்க ஆரம்பித்து விட்டனர். பெங்களூரிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் வரை நடந்து செல்வதென்றால் சுமார் 1500 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். எனினும் வாழ்வோ, சாவோ அது சொந்த ஊரில் நடக்கட்டும் என்று துணிந்து விட்டனர்.இது கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.