புதுதில்லி, ஜூலை 24-
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று (புதன்கிழமை) ஓய்வு பெற்றனர். மாநிலங்களவைத் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அவர்களுக்குப் பிரியாவிடை அளித்து வாழ்த்தி அனுப்பினார்கள்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையைச் சேர்ந்த து.ராஜா, அஇஅதிமுகவைச் சேர்ந்த டாக்டர் வி.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுணன், டாக்டர் ஆர். லட்சுமணன், டி.ரத்தினவேல் மற்றும் திருமதி கனிமொழி (இவர் மக்களவை உறுப்பினராகிவிட்டதால் முன்னதாகவே ஓய்வுபெற்றுவிட்டார்) ஆகியோர் இன்று பதவி ஓய்வு பெற்றார்கள்.
இவர்களை வாழ்த்தி மாநிலங்களவைத் தலைவர் எம். வெங்கய்யா நாயுடு கூறியதாவது:
ஓய்வுபெறுகின்ற அத்துணை உறுப்பினர்களும் இந்த அவையிலும், நாடாளுமன்ற நிலைக்குழுக்களிலும் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பங்காற்றியிருக்கிறார்கள். அவர்களின் அளப்பரிய பங்களிப்புக்காக என் இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வெங்கய்யா நாயுடு கூறினார்.
குலாம் நபி ஆசாத்
எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) பேசியதாவது:
நாம் மதிப்புவாய்ந்த பல உறுப்பினர்களை இழக்கிறோம். குறிப்பாக து.ராஜா அவர்களை மிகவும் இழக்கிறோம். ஒவ்வொரு நாளும் அவர் மூன்று அல்லது நான்கு உரைகளை அளித்திடுவார்.
(அதனால்தான் அவர் ராஜா என்று அவைத்தலைவர் உடனே குறுக்கிட்டுக் கூறினார்.)
டாக்டர் வி. மைத்ரேயன் ஏன் அரசியலைத் தேர்ந்தெடுத்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் தன் டாக்டர் தொழிலில் இரண்டு கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும். ஆனால் அதைவிட்டுவிட்டு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் ஈட்டும் இந்தப் பணியில் இவ்வளவு காலமும் இருந்துவந்தார்.
டி.கே. ரங்கராஜன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன் தமிழில் உரையாற்றினார். அவர் பேசுகையில், து.ராஜாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். து. ராஜா பேசும்போது, அவைத்தலைவர் எப்போதும் அவருக்கு கூடுதல் நேரம் ஒதுக்கிடுவார். அனைவருமே அவரை விரும்புவார்கள். டாக்டர் வி.மைத்ரேயனை அவர் புற்றுநோய் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்துவந்த காலத்திலிருந்தே நன்கு தெரியும் என்றார். எங்களுக்கிடையே திருச்சி இணைப்புப் பாலமாக இருந்தது என்று சுட்டிக்காட்டினார். அவர், நான், திருச்சி சிவா, அர்ஜூணன் என அனைவருமே திருச்சிவாசிகள். நாங்கள் அனைவருமே தமிழ் உயர்வுக்காகப் பாடுபடுவோம் என்றார்.
தேசியவாதக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஜீத் மேமன், கனிமொழியை வாழ்த்திப் பாராட்டினார். அவர் மக்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்காமலிருந்தால் இன்றுதான் அவரும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவார் என்றார்.
அதேபோன்று ஏ. நவநீதிகிருஷ்ணன் (அஇஅதிமுக), திருச்சி சிவா முதலியவர்களும் பணி ஓய்வு பெறும் உறுப்பினர்களைப் பாராட்டிப் பேசினார்கள்.
உறுப்பினர்கள் அளித்த பிரியா விடை வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு து.ராஜா பேசியதாவது:
நான் பேசத் துவங்கும்போதெல்லாம் ஏன் நம் நாட்டில் சமூகரீதியாக சுரண்டப்பட்ட, பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் மிக அவலநிலையில் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் வாழ்கிறார்கள் என்று மிகவும் வலியுடன் சுட்டிக்காட்டுவேன். அவர்கள் அனைவருமே மனிதர்கள்தான். தலித்துகள், பழங்குடியினர், பொருளாதாரரீதியாக சுரண்டப்பட்டவர்கள், சமூகரீதியாகப் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், அரசியல்ரீதியாக விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்? நாம் அவர்களையும் மனிதர்களாகக் கருதிட வேண்டும். இதுவே என் விருப்பம்.
நாடாளுமன்றம் எப்படி இருக்க வேண்டும் என்று டாக்ர் அம்பேத்கர் மற்றும் பல சீர்திருத்தவாதிகள் நினைத்தார்களோ அப்படிச் செயலாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் நாடாளுமன்றப் பணியிலிருந்துதான் ஓய்வு பெறுகிறேன். மக்களுக்கான என் பணி தொடரும்.
இவ்வாறு து. ராஜா கூறினார்.