புதுதில்லி:
கழிவுகளை அகற்றும் போது உயிரிழப்பவர்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.கழிவு நீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் போது துப்புரவுத்தொழிலாளர்கள் உயிரிழப்பது குறித்தும்அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புதொடர்பாகவும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான அசாதுதீன் ஒவைசி மற்றும் சையத் இம்தியாஸ் ஜலீல்ஆகியோர் செவ்வாயன்று எழுப்பிய கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைஅமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பதில் அளித்தார்.
அப்போது, 1993 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம்செய்யும் போது, 620 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாகத் தமிழகத்தில் 144பேரும், குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், உபியில் 71 பேரும், ஹரியானா 51, ராஜஸ்தான் 33, பஞ்சாப் 30, தில்லி 28,மேற்கு வங்கம் 18, கேரளா 12, உத்தர்கண்ட்9. ஆந்திரம் 8, சத்தீஸ்கர் 4, சண்டிகர் 4, தெலுங்கானாவில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது 15 மாநிலங்களில் எடுக்கப்பட்ட தரவுகள் மூலம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் ஆகும். அனைத்து மாநிலங்களிலும் தரவு எடுத்தால் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு உரிய உபகரணங்கள் வழங்கவேண்டும், கைகளால் கழிவுகளை அகற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்பு கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையும் மாறி, கழிவுநீர் அடைப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் கேரளாவைப் போல், ரோபோக்களை பயன்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.இதில் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம்செய்யும் போது தமிழகத்தில் அதிகளவிலான துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. இந்தியாவில்முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு. மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்குத் தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன்’’ எனக் கூறியுள்ளார்.