துணைநிலை ஆளுநர் கிரண்பேடி யூனியன் பிரதேசத்தின் வழக்கமான நடவடிக்கைகளில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அவர்கள் நியமிக்கப்பட்டதிலிருந்து அம்மாநில காங்கிரஸ் அரசின் வழக்கமான செயல்பாடுகளில் தலையிடுவதும், புதுச்சேரியின் பல இடங்களின் அரசின் செயல்பாடுகளை ஆய்வு பணி மேற்கொள்வதும் என அரசின் அதிகாரங்களில் தலையீடு செய்து வந்தார். இதை எதிர்த்து கடந்த 2017ல் புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ லக்ஷ்மிநாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் துணைநிலை ஆளுநரின் அதிகார வரம்பை கேள்வி எழுப்பும் வகையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதல்வரின் அதிகாரங்களில் தலையிட எந்த அதிகாரமும் இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், புதுச்சேரி அரசின் எந்த ஆவணங்களை கேட்பதற்கும் துணைநிலை ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என தீர்ப்பில் கூறியுள்ளது.