tamilnadu

img

குழந்தைகள் நல்வாழ்வுக்கான நாடுகள் பட்டியல்... இலங்கையை விடவும் பின்தங்கியது இந்தியா!

புதுதில்லி:
குழந்தைகள் நலவாழ்வுக்கான நாடுகள் பற்றிய ஆய்வில், இந்தியா மிக மோசமான இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.‘உலக சுகாதார நிறுவனம்’ (World Health Organization), ‘யுனிசெப்’ (UNICEF), லாண்செட் (The Lancet) மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து உலகம் முழுவதும் 180 நாடுகளில் குழந்தைகளுக்கான நல்வாழ்வு குறித்தும் அவர்களுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் பற்றியும் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. 

40 குழந்தைகள் நல நிபுணர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்று, ‘நிலைத் தன்மை மற்றும் செழிப்புக் குறியீடு’ ஆகியஇரண்டு பிரிவுகளில் இந்த ஆய்வை நடத்தினர். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், பிரசவ கால குழந்தை இறப்பு, குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், சுகாதாரம், தூய்மை மற்றும் தீவிர ஏழ்மை இல்லாமை ஆகியவை செழிப்புக் குறியீடுகளில் அடங்கும். கல்வி வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுதந்திரம், வன்முறையில் இருந்து பாதுகாப்பு போன்றவையும் செழிப்பு குறியீடாக கொள்ளப்பட்டுள்ளது.கார்பன் டை ஆக்சைடை நாடுகள் வெளிப்படுத்தும் அளவு, எதிர்கால வளர்ச்சிக்கான நாடுகளின் பங்களிப்பு ஆகிய சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகள் ஆகியவை, ‘நிலைத்தன்மை’ குறியீடாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி ‘நிலைத்தன்மை குறியீடு’ என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கு உகந்த சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கான குறியீட்டில், 180 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 77-ஆவது இடமே கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கான நல்வாழ்வு அளிக்கும், செழிப்புத் திறன் குறியீட்டு பட்டியலில் இன்னும் மோசமாக 131-ஆவது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.அதேநேரம் இந்த செழிப்புத் திறன் குறியீட்டு பட்டியலில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர் 12-ஆவது இடத்தையும், சீனா 43-ஆவது இடத்தையும், சின்னஞ்சிறிய நாடான இலங்கை 68-ஆவது இடத்தையும் பெற்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளன. 

பாகிஸ்தான் (140-வது இடம்), வங்கதேசம் (143-ஆவது இடம்) ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவோடு நெருக்கமாக இருக்கின்றன.குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு,நல்ல ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றை வழங்கும் நாடுகள் பட்டியலில், நார்வே முதல் இடத்தை பிடித்துள் ளது. தென்கொரியா இரண்டாவது இடத்தையும், நெதர்லாந்து 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. எனினும் கார்பன் டை ஆக்சைடை அதிகம் வெளியிடும் நாடுகள் பட்டியலில் இந்த நாடுகள்முறையே 156, 166, 160 ஆகிய இடங் களையே பிடித்துள்ளன. நொறுக்குத் தீனிகள் வர்த்தக கலாச்சாரம் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற நொறுக்குத்தீனிகள் குழந்தைகளை கவரும் வகையில் அதிக அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இவற்றை சாப்பிட்டால் குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், அவர்களின் உடல் எடையும் அதிகரித்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, இவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உலக அளவில் புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தல்களையும் அந்த அறிக்கை வழங்கியுள்ளது.