tamilnadu

img

கார்ப்பரேட் விவசாயத்திற்கு கதவு திறக்கும் சட்டங்கள்... மக்களவையில் பி.ஆர்.நடராஜன் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் பயன் அளிக்காத, “விவசாயிகள் ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டமுன்வடிவு நிராகரிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் கூறினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  “விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல்) ஒப்பந்தம் விலை உத்தரவாதம் மற்றும்பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டமுன்வடிவு, 2020” மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, பி.ஆர். நடராஜன் பேசியதாவது: இந்தியாவில் ஒப்பந்த விவசாயத்தின் மூலம், பல பயிர்களின் விவசாயத்தைப் பொறுத்தவரை  விவசாயம் மேற்கொள்வது என்பது அநேகமாக இப்போது சட்டப்படி எழுதப்படாமலேயேதான் நடந்துவருகிறது. பலஇடங்களில் விதை உற்பத்தி மற்றும் கரும்புஉற்பத்தி ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊறுகாய்க்கு உதவும் வெள்ளரிக்காய், உயர்ரக சிப்ஸ் தயாரிப்பதற்கான உருளைக் கிழங்கு, மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான பூக்கள் வளர்ப்பு ஆகியவையும் ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையில்தான் எழுதப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பவரிடம் விவசாயிகள் தங்கள்விருப்பம் எதையும் தெரிவிக்க முடியாது. தங்கள் நிலத்தில் அப்போதுள்ள பருவநிலைக்குத்தக்கவாறு உடனடியாக வருமானம் ஈட்டக்கூடிய விதத்தில் என்ன பயிர் விளைவித்திடலாம் என்று விவசாயிக்குத் தெரிந்தாலும், அதனை விளைவித்திட அவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது.மாறாக ஒப்பந்தம் செய்திருப்பவர் என்ன விளைவிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறாரோ அதைத்தான் விளைவித்திடவேண்டும். மேலும் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகள், சிறிய அளவில் நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதில்லை. மாறாக அவர்கள் நடுத்தர மற்றும்பணக்கார விவசாயிகளிடமே ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறார்கள், செய்துகொண்டுமிருக்கிறார்கள்.   மேலும் ஒப்பந்தம்செய்துகொண்டிருப்பவர், விவசாயியிடமிருந்து விளைச்சலைப் பெற்று, எடுத்துச்சென்று, ஆதாயம் அடைந்த போதிலும், பலஇடங்களில் தாங்கள் விவசாயிகளிடம் ஒப்புக்கொண்டதுபோல் பணம் தராது ஏமாற்றுவது என்பதும் நடந்துகொண்டிருக்கிறது. இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் ஏதும் இல்லாததால், விவசாயிகளால் இதற்கெதிராக எங்கேயும் முறையிட வாய்ப்பும் இல்லாத நிலை இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் அரசாங்கம் இந்தச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.  இதற்கு அளித்துள்ள பெயர், “விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல்) ஒப்பந்தம் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டமுன்வடிவு, 2020”இந்தச் சட்டமுன்வடிவானது ஒப்பந்தம் செய்துகொள்பவருக்கும் ,விவசாயிக்கும் இடையேயான ஒப்பந்தம் என்று கூறப்பட்டபோதிலும், ஒப்பந்தத்தை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு ஒப்பந்தம் செய்துகொள்பவருக்கு உண்டு என்பதை இந்த ஒப்பந்தம் எந்த நிலையிலும் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் செய்யலாம் என்று கோரும்விதத்தில் ‘may’ என்கிற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  எனவே ஒப்பந்தத்தை அவர்கள் மீறினாலும், விவசாயி இதற்காக நீதிமன்றத்தை அணுகி நியாயமோ நீதியோ கோர முடியாது.

விவசாயிகள் உற்பத்தியாளர் ஸ்தாபனம்,‘விவசாயி’ என்பதைத் தவறாக வரையறுத்திருக்கிறது. அது, வேளாண் இடுபொருட்கள் விநியோகத்தை “பண்ணை சேவைகள்” என்று அதனை சமமாகக் கருதுகிறது. அது கார்ப்பரேட்டுகள் விவசாயத்தில் நேரடியாகப் பங்குபெறும் விதத்தில் உற்பத்தி ஒப்பந்தத்தை கொண்டுவருகிறது.   அது தகுதிபடைத்த மூன்றாவது தரப்பு மதிப்பீட்டாளர்களையும், மூன்றாவது தரப்பு அமலாக்கத்தையும் கோருகிறது.விவசாயிகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் தாமாகவே முன்வந்து செய்து கொள்ளப்படுவதால், பலசமயங்களில் எழுத்துப்பூர்வமாக செய்துகொள்ளப்படுவதாலும், இதனை எவரேனும் மீறும்பட்சத்தில், அவர்கள் சிவில் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு இந்தச் சட்டத்தின் 19ஆவதுபிரிவு தடை செய்கிறது. இதனை நீக்கிட வேண்டும். இல்லையேல், இதனால்  எந்தவொரு ஒப்பந்தத்திலும் பலவீனமாக இருக்கின்ற விவசாயிகளுக்கு அநியாயம் இழைத்ததாகவே ஆகும். இதனால் கமிஷன் ஏஜண்டுகள் மட்டுமே பயன் அடைவார்கள்.இடுபொருட்களை சேவைகளுடன் சமமாகப் பாவிக்கக் கூடாது. (பிரிவு 2(e)இல் இவ்வாறு கருதப்பட்டிருக்கிறது.) விவசாய ஒப்பந்தத்திற்கும் , வர்த்தக மற்றும் வணிக ஒப்பந்தத்திற்கும்  இடையே வேறுபடுத்தி இருக்கக் கூடாது. (பிரிவு 2(h) and 2(h)(i) இவ்வாறு வேடுபடுத்தி இருக்கிறது.)

“உற்பத்தி ஒப்பந்தம்” என்ற கருத்தாக்கமே தேவையில்லை. ஏனெனில் இது “கார்ப்பரேட் விவசாயத்திற்கான”பதிலி மார்க்கமாகும்.இந்தச் சட்டமுன்வடிவில் “விவசாயிகள் உற்பத்தியாளர்கள் ஸ்தாபனத்தில்”(FPO) கூறப்பட்டுள்ள ‘விவசாயி’ என்பதற்கான வரையறையைக் கொண்டு வந்திருக்கக்கூடாது. இந்தச் சட்டமுன்வடிவின் நோக்கத்திலிருந்து, “விவசாயிகள் உற்பத்தியாளர்கள் ஸ்தாபனத்தையே” முற்றிலுமாக நீக்கி இருக்க வேண்டும்.இந்தச் சட்டத்தை, நாட்டில் அமலில் உள்ளஇன்றியமையாப் பண்டங்கள் சட்டம் மற்றும்இதர சட்டங்களின் அதிகாரவரம்பெல்லையிலிருந்து தனியே பிரித்து வைத்திருக்கக் கூடாது.

அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்?
 உண்மையில் அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், விவசாய உற்பத்திப் பொருள்களின் விலை, குறைந்தபட்ச ஆதார விலையுடன் இணைக்கப்படுவதை உத்தரவாதப்படுத்தி இருக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையைவிட அதிகமான அளவில் இவ்வாறு விவசாய ஒப்பந்தத்தின்கீழ் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.இந்தச் சட்டமுன்வடிவு இவற்றைச் செய்யத்தவறி இருக்கிற காரணத்தினால் இந்தச் சட்டமுன்வடிவை நிராகரிக்கிறேன், இந்த அவை இதனை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.