tamilnadu

img

கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இட ஒதுக்கீடு மாநிலங்களவையில் கே.கே.ராகேஷ் வலியுறுத்தல்

 

நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் எவ்வித விதிவிலக்குமின்றி இடஒதுக்கீட்டுக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே.கே.ராகேஷ் வலியுறுத்தினார்.  

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையன்று 2019ஆம் ஆண்டு மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு) சட்டமுன்வடிவு விவாதத்திற்கு வந்தபோது அதில் பங்கேற்று கே.கே. ராகேஷ் பேசியதாவது:

இந்தச் சட்டமுன்வடிவு, சில கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவானது கல்வி நிறுவனங்களை, இட ஒதுக்கீட்டிற்காக, ஓர் அலகாக (a unit-ஆக) கருதப்பட வேண்டும் என்கிறது. இதன் மூலம் இந்தச் சட்டமுன்வடிவு இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஒதுக்கித்தள்ளுகிறது.

உச்சநீதிமன்றம் இது தொர்பாக தன் தீர்ப்பை 2017ஆம் ஆண்டில் அளித்தது. இதே மோடி அரசாங்கம்தான் அப்போதும் ஆட்சியிலிருந்தது. அப்போதே இந்த அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் அது தொடர்பாக அப்போதே ஒரு சட்டமுன்வடிவைக் கொண்டு வந்து, நிறைவேற்றியிருக்க முடியும். ஆயினும் அதனைச் செய்திடவில்லை. திடீரென்று தேர்தல் வந்துவிட்டதால், இது தொடர்பாக அவசரச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. ஏன் இந்த திருகுவேலை? இந்த அவையில் 2017இலேயே சட்டமுன்வடிவைக் கொண்டு வந்து இதனை நிறைவேற்றியிருக்க முடியும். அதனைச் செய்யாது அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள். எனவே அதனை நாங்கள் எதிர்த்தோம்.  

நம் நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நம் மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் மேலாக இருக்கிறார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் மத்தியக் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது வெறும் 9.8 சதவீதம் மட்டுமேயாகும். தற்சமயம் மத்தியக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள் (அசோசியேட் புரபசர்கள்), பேராசிரியர்கள் முதலானவர்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் வெறும் ஒரு சதவீத அளவிற்குத்தான் இருக்கிறது.

இந்த அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டபின்னர்,  நாட்டில் உள்ள 13 மத்தியப் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்காக விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. எனினும் அப்பல்கலைக் கழகங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகையில், இடஒதுக்கீட்டுக் கொள்கை மீறப்பட்டிருக்கிறது.  

இப்போது இந்தச் சட்டமுன்வடிவிலிருந்து ஒருசில கல்வி நிறுவனங்களுக்கு ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது? மத்திய அரசால் நிதி அளித்துச் செயல்படுகிற அனைத்து மத்தியக் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும். ஏன் பல கல்வி நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது? இதனை நாங்கள் எதிர்க்கிறோம்.

இக்காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் தனியார் கல்விநிறுவனங்கள் புற்றீசல்கள்போல் அதிகரித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அவற்றில் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் (deemed universities) ஆகும். பல்கலைக்கழக மான்யக்குழு அவற்றிற்கு ஒப்புதல்கள் (concurrence) கொடுத்திருக்கிறது. அத்தகைய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் விதிமுறைகள் என்ன? இச்சட்டமுன்வடிவில் அத்தகைய தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு, இட ஒதுக்கீட்டுக் கொள்கையிலிருந்து, ஏன் விதிவிலக்குகள் அளித்திருக்கிறீர்கள்?  

நாட்டில் ஜியோ இன்ஸ்டிட்யூட் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு ஏன் உத்தரவாதம் செய்யப்படவில்லை? ஜியோ இன்ஸ்டிட்யூட்டும் தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கட்டும்.

தற்சமயம் பல்கலைக்கழகங்களில் பணியிடங்கள் ஏராளமாகக் காலியாக இருக்கின்றன. 41 பல்கலைக் கழகங்களில் சுமார் எட்டாயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இப்பல்கலைக் கழகங்களில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு தடை இருப்பதுபோலவே தெரிகிறது. காலியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட இந்த அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்பும்போது இடஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக சில திருத்தங்களை முன்மொழிந்திருக்கிறோம். அவற்றை பரிசீலனை செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கே.கே.ராகேஷ் பேசினார்.