tamilnadu

img

கிரண்பேடி மீண்டும் அடாவடி முதல்வர் வெளிநடப்பு

புதுச்சேரி:
இலவச அரிசிக்கு பதில பணம் என்ற துணை நிலை ஆளுநரின் அடவடியை கண்டித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மாஹே தொகுதி எம்எல்ஏ பேராசிரியர் ராமச்சந்திரன்,  இலவசஅரிசி நிறுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் கந்தசாமி,“ இலவச அரிசி வழங்குவது முக்கியமான பிரச்சனையாக உள்ளதால் இன்றைய தினமே அனைத்து உறுப்பினர்களும் ஆளுநரை சந்தித்து பேச பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்றார்.அப்போது குறுகிட்ட  அதிமுக உறுப்பினர் அன்பழகன்,“ ஆளுநரை சந்திப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் வரமாட்டோம். அனைவருக்கும் அரிசி வழங்க பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தால் நாங்கள் ஆதரிக்கிறோம்” என்றார்.

தீர்மானம்
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் நாராயணசாமி உடனடியாக கொண்டு வந்த தீர்மானத்தில், “இலவச அரிசி வழங்குவது புதுச்சேரி அரசின் முக்கிய நலத் திட்டங்களில் ஒன்று. முதலில் அனைத்து குடும்பத்தினருக்கும் 20 கிலோ அரிசியும், பின்னர் சிகப்பு அட்டைகளுக்கு 20 கிலோவும், மஞ்சள் அட்டைகளுக்கு 10 கிலோவும் இலவசஅரிசி வழங்கப்பட்டது. ஆனால், அரிசிக்குப் பதில் பணம் வழங்க வேண்டும் என்று ஆளுநர் கூறியதால் கிலோவிற்கு ரூ.30,  சிகப்பு அட்டைகளுக்கு ரூ.600, மஞ்சள் அட்டைகளுக்கு ரூ.300 என வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அரிசி விலை உயர்ந்து வருவதாலும், அரிசிக்கு வழங்கப்படும் பணத்தை வீண் செலவு செய்து விடுவதாலும், மக்கள் அரிசியே தர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாலும் கடந்த 7.6.19 அன்று அமைச்சரவையில் முடிவு எடுத்தோம். எனவே, தொடர்ந்து இலவச அரிசியே வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆளுநருடன் சந்திப்பு
முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, ஜெயமூர்த்தி, வெங்கடேசன், அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் சனிக்கிழமை (செப்-7) துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தனர். அப்போது  இலவச அரிசி விவகாரத்தில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எடுத்து கூறி இலவசஅரியே வழங்க வலியுறுத்தியுள்ளனர். அதற்கு ஆளுநர் மறுத்துவிட்டார்.

வெளிநடப்பு
உடனே ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் வெளிடப்பு செய்தனர்.பிறகு, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி,“ இலவச அரிசி திட்டத் திற்காக நிதிலை அறிக்கையில் ரூ.160 கோடி ஒதுக்கியுள்ளோம். அதற்கான கோப்பு அமைச்சர் மூலம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அரிசிக்கு பதில் பணம் போட வேண்டும் என்று கூறி கோப்பை ஆளுநர் அனுப்பிவிட்டார். எனவே, ஆளுநரை சந்தித்தோம். அவர் தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. ஆகவே, ஆளுநர் மாளிகையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்” என்றார்.