புதுக்கோட்டை:
தமிழகத்தில் நடைபெற்றுள்ள கிசான் முறைகேடு குறித்து பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் ஏ.லாசர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:
கொரோனா பாதிப்பில் கடந்த மாதம் 7, 8-வது இடங்களில் இருந்த இந்தியா தற்பொழுது இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்திலும் சராசரியாக நாள்தோறும்6 ஆயிரம் வீதம் நோய்த்தொற்றின் தாக்கம் உள்ளது. மரணங்களும் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குமருத்துவ ரீதியாக, பொருளாதார ரீதியாக போதுமான நடவடிக்கை களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை. சாமானிய மக்களின் வேலை வாய்ப்புகள் வெகுவாக குறைந்து வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
மத்திய அரசின் விவசாயி களுக்கான கிசான் திட்டத்தில் இடைத்தரகர்கள் மூலம் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளன. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது போதுமானது அல்ல. கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது. எனவே, கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.மத்திய அரசு பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தைவிரிவுபடுத்துவதாக அறிவித்துள் ளது. இதை உடனடியாக தொடங்குவதோடு வேலை நாட்களை 200ஆகவும் கூலியை ரூ.600 ஆகவும்உயர்த்தி வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் 6 அன்று அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள் முன்பாகவும் போராட்டங்களை நடத்தவுள்ளோம்.இவ்வாறு லாசர் கூறினார்.