பாஜகவுக்கு மாற்றாக தினகரன், கமல், சீமான் போன்றோரின் கட்சிகளை ஏன் ஆதரிக்கக் கூடாது என்கின்றனர் சிலர். தலைவலிக்கு தைலம் தடவலாம். காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிடலாம். மோடியின் ஆட்சி புற்று நோயைப் போல புரை யோடிக்கிடக்கிறது. உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும். அதற்கான வல்லமை தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மட்டுமே உண்டு. அறுவைச் சிகிச்சை செய்யும் கத்தியின் கைப்பிடியாக சு.வெங்கடேசன் இருப்பார். ஓட்டுப்போடுகிற யாரும் தயவுசெய்து வேட்பாளர் என்ன சாதி என்று பார்க்காதீர்கள். அவருக்கு தகுதி இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். நல்லது எது நடந்தாலும் அது சாதியை மீறித்தான் நடக்கும். கெடுதல் மட்டுமே சாதியின் துணையோடு நடக்கும்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பானையில் எழுத்து இருந்ததை கீழடி நிரூபிக்கிறது. அப்பொழுதே சாதாரண மக்களும் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். இந்த மண்ணின் மிகப்பழமையான நாகரிகம் தமிழருடையது என்பதை கீழடி ஆய்வு மூலம் அமர்நாத் ராமகிருஷ்ணன் வெளிக்கொண்டு வந்தார். அதை மண்போட்டு மூடியபோதுதான் சு.வெங்கடேசன் களத்துக்கு வந்தார். நீங்கள் வெங்கடேசனை வெற்றிபெறச் செய்வது தமிழை வெற்றிபெறச்செய்கிறீர்கள் என்று அர்த்தம். அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது மதுரை மக்களின் கடமை.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் தமுஎகச தலைவர்களில் ஒருவரான கவிஞர் நந்தலாலா பேசியதிலிருந்து...