புதுதில்லி:
சுமார் 90 கட்டிட வடிவமைப்பா ளர்கள், வரலாற்றாசிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் சேர்ந்து, இப்போது இருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பல அலுவலகங்கள் செயல்பட்டுவரும் கட்டிடங்களை இடிக்கக்கூடாது என்றும்,அதற்குப் பதிலாக மத்திய அரசு முடிவுசெய்திருக்கும் சென்ட்ரல் விஸ்டா எனப்படும் முக்கோண வடிவிலான கட்டிட அமைப்புக்கான முன்மொழிவை நிராகரித்திட வேண்டும் என்றும், தில்லி நகர்ப்புற கலை ஆணையத்திற்கு (Delhi Urban Art Commission) கடிதம் எழுதியுள்ளனர்.
சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் தங்கள் முன் வைத்திட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருப்பதையும் இக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மத்திய அரசு, தற்போதுள்ள வட்ட வடிவிலான நாடாளுமன்றக் கட்டிட த்தையும், மற்றும் பல மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும் கட்டிடங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு, புதிதாக முக்கோண வடிவில் நாடாளுமன்றக் கட்டிடத்தையும், இதர மத்திய அரசு அலுவலகங்களையும் கட்ட திட்டமிட்டிருக்கிறது.மத்திய பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் அனுமதி கோரி, எழுதியுள்ள கடிதத்தில், முக்கோண வடிவில் கட்டப்பட இருக்கும் நாடாளுமன்றக் கட்டிடத்தின் பரப்பளவு 10.5 ஏக்கர் என்றும், அது தற்போது அமைந்துள்ள பாரம்பரியக் கட்டிடஅமைப்பு (heritage structure)க்குப் பக்கத்தில், 922 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கிறது என்று தெரியவருகிறது.
இது தொடர்பாக சென்ற மாதம் நடைபெற்றக்கூட்டத்தில் தில்லி நகர்ப்புறகலை ஆணையம், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தொடர்பாக மட்டும் கூடுதல் விவரங்களை அரசாங்கத்திடம் கோரியிருந்தது,கட்டிட வடிவமைப்பாளர்களும் மற்றவர்களும் கையெழுத்திட்டுள்ள இக்கடிதத்தில், இவ்வாறு தில்லி நகர்ப்புறகலை ஆணையம் கோரியிருப்பது, “பொருத்தமற்றது, தவறாக வழிநடத்தக்கூடியது, சட்டவிரோதமானது” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மேற்படி கூட்டத்தில் நிகழ்ச்சிக்குறிப்பேடு, ஆணையத்தின் இணைய தளத்தில் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.இக்கடிதத்தில் வரலாற்றாசிரியர் நாராயணி குப்தா, கட்டிட வடிவமைப்பாளர் அருண் ரேவால், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஏ.ஜி.கே. மேனன், கல்வியாளர் சுதா கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கையெழுத்திட்டிருக்கிறார்கள். (ந.நி.)