புதுதில்லி:
தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை தலா ரூ. 10 கோடிக்கு பாஜக பேரம் பேசுவதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியிருந்தார். தற்போது வரை 7 எம்எல்ஏ-க்களிடம் இந்த பேரம் நடந்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
பாஜகவோ உடனடியாக அதை மறுத்தது. உட்கட்சி பூசலை சமாளிக்க முடியாமல், தங்கள் மீது ஆம் ஆத்மி வீண்பழி போடுவதாக பாஜக கூறியது.எனினும், மணீஷ் சிசோடியா கூறியதுதான் நடந்தது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த காந்தி நகர் தொகுதி எம்எல்ஏ அனில் பாஜ்பாய் என்பவரை, பாஜக வளைத்தது. அத்துடன் இல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமை மீது அதிருப்தி அடைந்திருக்கும் 14 எம்எல்ஏ-க்கள் தங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் தில்லி பாஜக முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
பாஜக-வின் இந்த செயலுக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மோடிஜி, நீங்கள் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அந்த மாநில ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறீர்களா? இதற்குப் பெயர்தான் உங்கள் அகராதியில் ஜனநாயகமா?” என்றும் கேட்டுள்ளார். மேலும், “இவ்வாறு நீங்கள் குதிரை பேரம் நடத்துவதற்கு உங்களுக்கு (பாஜகவுக்கு) எங்கிருந்து பணம் வருகிறது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.