tamilnadu

img

ஜனநாயகத்தை பாதுகாப்போம்... பிருந்தா காரத்

கொரோனா ஊரடங்கு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு மாவட்டக்குழுக்கள் முகநூல் நேரலை வாயிலாக கட்சியின் உறுப்பினர்களையும், பொது மக்களையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. பல்வேறு பொருள்களில் கருத்தரங்குகள், மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றன. கட்சியின் திருநெல்வேலி - தென்காசி மாவட்டக்குழு முகநூல் நேரலை பக்கத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் பல்வேறு தலைப்புகளில் கட்சியின் தலைவர்கள், பல்வேறு தளங்களில் செயல்படும் அறிஞர்கள், கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் உரை நிகழ்த்தினர். 100 வது நாளான செப்டம்பர் 1 அன்று ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற பொருளில் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மோகன் வரவேற்க, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.செண்பகம் ஒருங்கிணைக்க, மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பகம் நன்றி கூறிய இந்த நிகழ்வில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். பிருந்தா காரத் ஆற்றிய உரையின் சாராம்சம் இங்கு தரப்படுகிறது.

இந்திய சூழலில் எது ஜனநாயகம் என்று நாம்முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும்கம்யூனிஸ்ட்கள் என்ற முறையில் ஜனநாயகத்திற்கான வரையறையை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நாம்ஆளப்படுகிறோமே அல்லாமல் ஆன்மீகத்தால், மதத்தால்ஆளப்படவில்லை. இதுதான் நமது அரசியல் சட்டம் சொல்கிற மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகம். எனவே இந்திய ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ள அதன் அடிப்படையான மதச்சார்பின்மையைப் புரிந்து கொள்வது அவசியம். பாகிஸ்தான் போன்ற மதசார்புடைய நாடுகளிலும் தேர்தல்கள் நடைபெறுகின்றன, வாக்களிப்பதற்கான ஜனநாயக உரிமைகள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் மதத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கிறது. மதநூலின் அடிப்படையில் ஆட்சி நடக்கிறது. இங்கு இந்தியாவில் ஜனநாயகத்தின் அடிப்படை ஆன்மீகமல்ல, மதமல்ல; இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை மதச்சார்பின்மை. நமது ஜனநாயகம் மதச்சார்பற்ற ஜனநாயகம். 

நம் அரசியல் சட்டம் நமக்கு பல உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் அது தரும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சமூக பொருளாதார அமைப்பு நம்மிடமில்லை. நம் அரசியல் சட்டப் பிரிவுகள் 14 முதல் 30 வரைநமக்கு சமத்துவத்திற்கான உரிமை உள்ளிட்ட பல உரிமைகளைத் தந்துள்ளன. பிரிவு 14 முதல் 18வரை  பேச்சுரிமை உள்ளிட்ட சுதந்திரத்திற்கான உரிமை, பிரிவு 19 சுரண்டலுக்கு எதிரான உரிமை, பிரிவுகள் 23, 24 மதவழிபாட்டு உரிமை, பிரிவு32 சட்டப்பூர்வ தீர்விற்கான உரிமை என்று பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆபத்து எங்கிருந்து வருகிறது?
இவ்வளவு உரிமைகளும் வழங்கப்பட்டுள்ள போது ஜனநாயகத்திற்கு எங்கிருந்து ஆபத்து வருகிறது என்ற கேள்வி எழலாம்.  அந்த ஆபத்துக்கள்அரசியல் கட்சிகளிடமிருந்து வரவில்லை. மாறாக, இன்றைய சமூக அமைப்பிடமிருந்து வருகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள சமூக பொருளாதார அமைப்பு எப்படி உள்ளது? நம்நாடு சோசலிசக் குடியரசு என்கிறோம். ஆனால்உண்மையில் நடைமுறையில் இங்கே சோசலிசம் இல்லை.ஏற்றத்தாழ்வுகளை மேலும் மேலும் வளர்க்கிற இந்திய முதலாளித்துவ சமூக அமைப்பிடமிருந்து, நவீன பொருளாதார கொள்கையால் வழிநடத்தப்படுகிற அமைப்பிடமிருந்து ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது; இந்த முதலாளித்துவ அமைப்பின் தேவைகளுக்கும் நமது அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கும் இடையே பெரும் முரண்பாடும் மோதலும் ஏற்படுகிறது. உச்சபட்ச லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பிடமிருந்து ஜனநாயகத்தின் மீதான முதல் தாக்குதல் தொடுக்கப்படுகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு இந்தியாவில் என்ன நடைபெறுகிறது? தொழிலாளர் உரிமைகளை எடுத்துக் கொள்வோம். சங்கம் அமைக்க, வேலைநிறுத்தம் செய்ய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் நவீன பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கிய காலந்தொட்டு பாட்டாளி வர்க்க உரிமைகள் தாக்கப்பட்டு வருவது எப்படி? உச்சபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுள்ள நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள், நம் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் தாக்குகின்றன. எனவே ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம் நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான போராட்டமாகும்; முதலாளித்துவ கொள்கைகளின் விளைவாக தங்களின் அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கிற மக்களின் நல்வாழ்விற்கும் சமத்துவமிக்க வாழ்க்கைக்குமான  போராட்டமாகும். உலகெங்கும், இன்று வலதுசாரி சக்திகள் வளர்ந்துள்ள சூழலில், முதலாளித்துவ நெருக்கடியின்  காரணமாக இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் அடிப்படையான பிரச்சனை. 

இந்துத்துவாவின் ஆட்சி
ஆனால் இந்தியாவில், ஆட்சியில் இருக்கிற பாஜக அரசு ஒருபுறம் கார்ப்பரேட்களின் நலன்காப்பதற்காக ஜனநாயக உரிமைகளுக்கு வேட்டுவைக்கிற நவீன தாராளமய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதையும்  மறுபுறம்ஆர்எஸ்எஸ்சின் இந்துத்துவ கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிற சூழல் உள்ளது.ஆர்எஸ்எஸ், தொடங்கப்பட்ட காலந்தொட்டு ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத அமைப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான காலத்தில் மனு நீதியின் அடிப்படையில்தான் இந்திய அரசியல் சட்டம் அமைய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வாதிட்டது. அரசியல் சட்டத்தின் மீதும் அதன் அடிப்படையான மதச்சார்பின்மை மீதும் நம்பிக்கையற்ற ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவான பாஜக ஆட்சியதிகாரத்தில் இருக்கிறபோது நாம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஒடுக்கப்பட்டோரின் உரிமை
இன்றைக்கு மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு கொள்கையும் ஆர்எஸ்எஸ்சின் கலாச்சார, தத்துவார்த்த அடிப்படையில், இந்துத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் உள்ளது. தலித் மக்கள் குறித்த அவர்களின் அணுகுமுறை என்ன? தலித் மக்களின் உரிமைகள் குறித்த அவர்களின் பார்வை என்ன? ஆர்எஸ்எஸ் தலைவர்மோகன்பகவத், “இட ஒதுக்கீடு நடைமுறை தொடங்கிய போது பத்தாண்டுகளுக்கு அது இருக்கும் என்று அரசியல் சட்டத்தில்சொல்லப்பட்டது; ஆனால் பல பத்தாண்டுகள் முடிந்துவிட்டன. எனவே அதனை இப்போது மறுஆய்வு செய்ய வேண்டும்” என்று சொல்கிறார். தீண்டாமைக்கு எதிரான போராட்டம், சாதியத்திற்கு எதிரான போராட்டம் ஆகிய பிரச்சனைகளில் உச்சநீதிமன்றம் என்ன சொன்னது? தலித்கள் மீதான வன்முறை எதிர்ப்பு சட்டம் குறித்தவழக்கின் போது அச்சட்டம் சில சமயம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லி உச்சநீதி மன்றம் சட்டத்தில் சில தளர்வுகளை முன் மொழிந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் அதை ஏன் மறுக்கவில்லை? பாஜகஆளும் மாநிலங்களில் தலித்கள் மீது வன்முறைக் கட்டவிழ்த்து விடப்படுவது ஏன்? ஆக, பாஜக அரசின் ஒவ்வொரு கொள்கையிலும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இந்துராஷ்டிராவின் அரசியல், தத்துவார்த்த, கலாச்சார அடிப்படை இருக்கிறது.

ஆதிவாசிகள் குறித்த அணுகுமுறையை பாருங்கள்.சுற்றுச்சூழல் தாக்க வரையறை சட்டம்( EIA)  ஆதிவாசிகளின் இருப்பிடமான வனங்களை அந்நிய உள்நாட்டு பெருங்குழுமங்களுக்கு வணிகத்திற்காக திறந்து விட வழிசெய்கிறது. அதன் 83 பக்கங்களில் ஓரிடத்தில்கூட ஆதிவாசி என்றசொல் இடம் பெறவில்லை. ஆதிவாசிகளுக்கு தங்குவதற்கு, விவசாயம் செய்வதற்கு வனப்பாதுகாப்பு சட்டம் கொடுத்த உரிமைகளை இச்சட்டம் பறிக்கிறது. வனகிராம சபைகளின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்ற அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. பெண்களின் நிலைமை என்ன? பல போராட்டங்களின் விளைவாக குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் பெற்றோம்.அச்சட்டத்தின் பிரிவு 498 ஏ குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் புகார்கொடுக்க உரிமை அளிக்கிறது. ஆனால் ஆர்எஸ்எஸ்- பாஜக கூட்டத்தின் கலாச்சாரம், தன்னைஅடிமைப்படுத்திக் கொள்பவளே இலட்சியப் பெண் என்கிறது. இச்சட்டம் தவறாகப்பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லி இச்சட்டத்தில் நீரூற்றப்பார்க்கிறது. வன்புணர்விற்கு மரண தண்டனை என்று சட்டம் இயற்றுகிறார்கள்; ஆனால் பாலின வன்முறைகளுக்கு பெண்கள் அணியும் ஆடைதான் காரணம் என்று சொல்லும் இவர்கள் எந்த பாலின குற்றவாளிக்கு மரணதண்டனை பெற்றுத்தருவார்கள்? எனவே இவர்களின் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட தலித், ஆதிவாசி, பெண்கள் என்று அனைத்துப் பிரிவினரின் ஜனநாயக, அடிப்படை உரிமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான போராட்டமாகும். ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் அவர்களை நாம் திரட்டவேண்டியது அவசியமாகிறது.

அதிகாரக்குவிப்பு
மதச்சார்பின்மை மீதான ஆட்சியாளர்களின் தாக்குதல் சிறுபான்மையினர் மீதான தாக்குதலாக வடிவம் எடுக்கிறது. சிறுபான்மையினரை குறிவைத்து இன்றைக்கு குடியுரிமைச் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர், வருபவர்களில் யார் இந்தியக் குடிமகன் என்று முடிவெடுப்பதற்கு மதத்தை அடிப்படையாக கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இது குடியுரிமை சட்டத்தின் அடிப்படையையே மாற்றுகிறது. இதற்கு எதிராக சிறுபான்மை மக்களும் இடதுசாரிகளும் பிற ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடுகிற போது சிறுபான்மை மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் மதச்சார்பின்மை மீதான தாக்குதல், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

பாஜக அரசு அதிகாரத்தை மையப்படுத்துகிறது. ஒரே தேசம் என்று சொல்லி கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது; இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு அடையாளமான கூட்டாட்சியை சிதைக்கிறது. மாநில உரிமைகளைப் பறிக்கிறது. மொழிக்கொள்கை ஆகட்டும், கல்விக் கொள்கை ஆகட்டும், மத்திய அரசின் ஒவ்வொரு கொள்கையிலும் இந்துத்துவாவின் கோட்பாடு வெளிப்படும். அதன் மொழிக்கொள்கை இந்தியைத் திணிப்பது மட்டுமல்ல, பிற இந்திய மொழிகளின் அதிகாரத்தைப் பறிப்பதுமாகும். இதைத்தான் புதியகல்விக் கொள்கையில் காண முடிகிறது; அது மட்டுமல்ல, கல்வி அமைப்பின் அதிகாரத்தை மத்திய அரசிடம் குவிக்கிற உச்சபட்ச மையப்படுத்தலாக இவர்களின் கல்விக் கொள்கை உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு - மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கான மூன்று லட்சம் கோடி ரூபாய் பணத்தை வழங்க மறுத்து வருகிறது. இப்படி, மத்திய அரசு தனது கைகளில் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கை எடுத்துக்காட்ட பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இத்தகைய மைய அதிகாரக்குவிப்பு, எதேச்சதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. எல்லா அதிகாரமும் மத்திய அரசிடம் - மோடியிடமும் அமித்ஷாவிடமும் குவிகிறது.

மாற்றுக்கருத்தா... கருப்புச் சட்டம் பாயும்
இதன் காரணமாக இவர்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இப்போது சில தனிநபர்களைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். நலிந்த பிரிவினருக்காக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது தேசியபாதுகாப்பு சட்டம்பாய்கிறது. இவையெல்லாம், கேள்வி கேட்க நினைக்கும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்குமான மிரட்டல். மகராஷ்டிரா பீமா கோரேகான் எல்கர் பரிஷத் (BeemaKoregeon Elgar Parishad ) பிரச்சனையில் என்ன நடந்தது.பொய் வழக்குப்போடப்பட்டு  14 பேர்- வரவரராவ், ஆனந்த் டெல்டும்டே, சம்பாஞ்சி பிடே உள்ளிட்டோர் - சிறையில் அடைக்கப்பட்டனர். மகாராஷ்டிராவில் ஆட்சி மாறியதும் புதிய கூட்டணி அரசிடம் நாம் உட்பட சில அரசியல் கட்சிகள்வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தினோம். ஆனால் மத்திய அரசு அவர்கள் மீது தேசியப் பாதுகாப்பு முகமையைஏவி வழக்குப் போட்டது. தில்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியபல்கலைக்கழக மாணவர்கள் சிறைவைக்கப்பட்டனர்.

ஊடகங்களுக்கு வருவோம். இன்று பல ஊடகங்கள் ‘அரசின் மடியில் கிடக்கிற ஊடகங்கள்’ என்று  (lap media) அழைக்கப்படுகின்றன. மோடி அரசு மீண்டும் பதவியேற்ற பின்னர் கடந்த ஒரு வருடத்தில் 55 பத்திரிகையாளர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர். ஊடக உரிமை இன்று கேள்விக்குறியாக உள்ளது. ஊடக உரிமை குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 142 இடத்தில் உள்ளது. என்னே கேவலமான நிலைமை! தனிநபர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகங்கள் அரசை விமர்சித்தால் அவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை பார்த்துக்கொள்ளும்.

கூட்டாட்சி தத்துவத்தின் மீதான பெரிய தாக்குதலின் கொடிய அடையாளமாக, ஒரே இரவில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டு, இரு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறையிடப்பட்டனர். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஆம்! காஷ்மீரில் மத்திய அரசு இரத்தச்சுவை கண்டுள்ளது. இச்சொற்றொடரைப் பயன்படுத்துவதற்கு வருத்தமாக உள்ளது. ஆனால் வேறு என்னசொல்ல? இது காஷ்மீரோடு நின்று விடாது. உச்சநீதிமன்றம் அரசின் கருவியானால் என்ன நடக்கும்? காஷ்மீர் வழக்கு, தேர்தல் பத்திரம் வழக்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர் வழக்கு என்று பல வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாட்டைப் பார்க்கிறோம். நீதிபதி நியமனங்கள், அவர்களின் பணி உயர்வு என்று பலவற்றில் உச்சநீதிமன்ற மாண்பை மத்திய அரசு கெடுக்கிறது.

சமரசத்திற்கு இடமில்லை
இந்த சூழலில் கம்யூனிஸ்ட்களாகிய நாம், என்னசெய்யப்போகிறோம்? கைகட்டி மெளனமாக, என்றும்பார்வையாளர்களாக இருந்துவிட முடியாது. மக்கள்விரோதக் கொள்கைகளை எதிர்த்து மக்கள்  போராடுகிறார்கள். நாமும் பலமுனைகளில் போராட்டங்களைக் கட்டவேண்டும். தத்துவார்த்தபோராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். மதச்சார்பின்மையைப் பாதுகாக்க மென்மையான இந்துத்துவாவை கையிலெடுப்பது என்பதில் நாம் உடன்படவில்லை. பிற அரசியல் கட்சிகள் கருத்தியலாகப் போராடாமல் இருக்கலாம். நம்மால் தத்துவத்தில் சமரசம் செய்ய இயலாது, கூடாது. நமது சமரசமற்ற இந்த தத்துவார்த்த நிலைப்பாடே பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக உள்ளது. இந்த பெருந்தொற்றுக் காலத்திலும் பல சிரமங்களுக்கு இடையிலும் கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு மக்கள் நலப்பணிகளை - மாற்று பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுகிறது. இந்த உறுதி நமக்குத் தேவைப்படுகிறது.தமிழ்நாட்டில் பல பிரச்சனைகளில் பல சமூக சக்திகள் ‘அரசியல் சக்திகள் ஒன்றுபட்டு நிற்கின்றன. அவர்களோடு இணைந்து மக்கள் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். நமது தத்துவார்த்த நிலையில் உறுதியாக நின்றுகொண்டு இந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தொற்று இருக்கலாம், சிரமங்கள் இருக்கலாம், ஆனால் நம்முன் உள்ள சவால்கள் மக்களைத் திரட்டுவதற்கு, நம்மை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு நல்லவாய்ப்புக்களைத் தந்துள்ளன. மக்களிடம் செல்வோம், மக்களை அணிதிரட்டுவோம். 

தமிழாக்கம்: பேரா.வ.பொன்னுராஜ்