புதுதில்லி:
வேலையின்மை, இந்தியாவின் மிக முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்து இருப்பதாக,‘இப்சோஸ்’ (IPSOS) நிறுவனம் கண்டறிந்துள்ளது.உலகை அச்சுறுத்தும் காரணிகள் எவை?என்பது குறித்து, ‘இப்சோஸ்’ நிறுவனம் ஆய்வு
மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்தான், இந்தியாவிலேயே அதிகம் கவலைகொள்ளத்தக்க விஷயமாக வேலையின்மை பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 46 சதவிகித நகர்ப்புற இளைஞர்கள் வேலையின்மை பிரச்சனை குறித்து கவலைதெரிவித்துள்ளனர். அரசுத் தரப்பு தகவல்களின்படியே, நவம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம்3 சதவிகிதம் உயர்ந்திருந்தது குறிப்பிடத் தக்கது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே இந்தியாவில் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இந்த ஆய்வு அதற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்தியாவில் ஊழல், குற்றங்கள், வன் முறைகள், வறுமை, சமூக சமமின்மை, காலநிலை மாற்றம் ஆகிய காரணிகளும் அச்சுறுத்தலாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் பார்த்தால், வறுமையும் சமூக சமத்துவமின்மையும்தான் அதிக அச்சுறுத்தல் தரும் காரணிகளாக இருக்கின்றன. அதைத் தொடர்ந்து வேலையின்மை, குற்றங்கள், வன்முறை, சுகாதாரம் ஆகியவை இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.இந்த ஆய்வானது உலகின் 28 நாடுகளிடையே மாதாந்திர அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி இந்திய நகர்ப்புறங்களில் உள்ளஇளைஞர்களில் பாதிக்கும் மேலானோர் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்திருப்பது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கிராமப்புறங்களில் வேலையின்மை பிரச்சனை இன்னும் அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.
சமீபத்தில் ‘ராய்ட்டர்ஸ்டு’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய நகர்ப்புறங்களில்ஜனவரி - மார்ச் காலாண்டில் வேலையின்மைவிகிதம் 9.3 சதவிகிதமாக பதிவாகி இருந்தது. இது கடந்த நான்கு காலாண்டுகளில் மிகப் பெரிய சரிவாகும். 15 முதல் 29 வரையிலான வயதுடைய இளைஞர்களின் வேலையின்மை விகிதம் ஜனவரி - மார்ச் காலாண்டில் 22.5 சதவிகிதமாக இருந்துள்ளது. 2018 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில்இதன் அளவு 23.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.