கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 14
இந்தியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேசன் 1941ல் வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலத்தில் அமைக்கப்பட்டது. 1943-44 காலங்களில் இந்த அமைப்பு துரிதமாய் செயல்பட்டது. சமூகப் பொறுப்புணர்வு, தேசிய ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் சவாலை அது எதிர்கொண்டது. இப்டா இந்தியா முழுவதும் சோசலிச, தேசிய உணர்வை ஊட்டியது.
இந்தியாவில் மிக மூத்த கலைக்குழு இப்டாதான். இந்திய சினிமா, நாடகம், இசை, தற்கால டெலிவிசன் வரைக்கும் இப்டா கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். கே.ஏ.அப்பாஸ், டாக்டர் ஹோமி பாபா, அனில் டி சில்வா, அலி சர்தார் ஜாப்ரி, தாதா ஷர்மிங்கர் ஆகியோர்தான் இப்டாவின் ஆரம்ப கர்த்தாக்கள். இதிலிருந்துதான் தொடர்ந்து பிரபலமான கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், நடனமணிகள், பாடகர்கள் உருவாயினர். பிருதிவிராஜ் கபூர், அமர் ஷேக், ஷம்பு மித்ரா, ஹோமி பாபா, கிஷன் சந்தர், கைபிஆஷ்மி, மஜ்ரூ சுல்தான்புரி, சாகிர் லுதியான்வி, பால்ராஜ் சஹானி, மோகன் செகாவ், முல்க்ராஜ் ஆனந்த், ரொமேஷ்தாப்பர், ஹிமாதேவி, அன்னாபாவு சாத்தே, ஷைலேந்திரா, பிரேம்தாவன், இஸ்மத்சுக்தாய், கலுகோஷ், சேத்தன் ஆனந்த், தினாபதக், பண்டிட் ரவிசங்கர், சச்சின் சங்கர், பகதூர் கான், ஏ.கே.தங்கல், ஹபீப் தன்பீர், அப்ரர் அல்வி, ஹேமந்த்குமார், ஆதிமர்ஸ்பான், சலீஸ் சவுத்ரி, தர்லா மேத்தா, கய்யாம், பானி மஜும்தார், தேவ் ஆனந்த், சாந்தி பரதன், சித்தோ பிரசாத், ஹரீந்திரநாத் சட்டோபாத்தியாயா, பி.பி.சாத்தே, துர்கா கோட்டே, கேசவராவ் தத்தே, உத்பர்தத், ரித்விக் கட்டக், சத்யன் காப்பு, சஞ்சீவ்குமார், சூல் வெவ்வானி, ஷெகத் கைபி, மன்மோகன் கிருஷ்ணா, பாசுபட்டாச்சார்யா, அபித் ரஜ்வி, எம்.எஸ்.சாத்யு, குல்தீப் சிங், ரமேஷ் சுல்வார், சுனுபா ஆர்யா, ஷபினா ஆஸ்மி, பரூக்ஷேக், காதர்கான், யூனுஸ் பர்வேஸ், மக்மோகன், ஜாவித் சித்திக், சுதிர் பாண்டே, ஆஞ்சன் ஸ்ரீவத்சவா, பரத்கபூர், ராஜேஷ் வேடி என இன்னும் பலர். இவர்கள் அனைவரும் நாடகம், சினிமாவில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள் ஆவர்.
அறுபதாண்டுகளாக முதலிடம்
கடந்த அறுபதாண்டுகளாக அரங்க இயக்கத்தில் நாட்டில் இப்டாதான் முதலிடம் வகித்து வருகிறது. மும்பை இப்டா சார்பில் இதுவரை நூறு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஆங்கிலத்திலும் இந்த நாடகங்கள் நடைபெறுகின்றன. 1984ல் இப்டாவில் பாலர் பிரிவு துவங்கப்பட்டு குழந்தைகள் நாடக அரங்கும் நாடகங்களை நடத்தி வருகிறது. 1972ல் மறைந்த பிருதிவி ராஜ் கபூர் நினைவுப் போட்டிகளை கல்லூரிகளுக்கிடையே இப்டா நடத்தியது. இந்த நாடகப் போட்டியில் சிறந்த நாடகங்கள் மும்பையில் அரங்கேற்றப்பட்டன. இதன்மூலம் பலர் கலைஞர்களாக வெளிவந்தனர். இப்டாவின் சேவையைப் பாராட்டி 1994ம் ஆண்டு மத்திய அரசு சிறப்புத் தபால் தலையை வெளியிட்டது.
பீப்பிள்ஸ் தியேட்டர் என்ற பெயரை பிரபல விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா தான் தேர்வு செய்தார். அவர் ரோமெய்ன் ரோலந்தின் புத்தகத்திலிருந்து மக்கள் நாடக இயக்கம் என்ற பெயரை கண்டெடுத்தார். அரங்குகளில் மட்டுமின்றி மக்கள் கூடும் தெருக்களிலும், மைதானங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்துமாறு இப்டா வழிகாட்டியது. இப்டாவைத் துவக்கவும் நடத்தவும் தூண்டு கோலாக இருந்தவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பி.சி.ஜோஷியும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சஜ்ஜத் ஜாகீரும்தான். இரண்டாம் உலகப் போர், வங்காளப் பஞ்சம், சோவியத் யூனியன் மீது பாசிஸ்ட் படையெடுப்பு, கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் மீது பிரிட்டிஷ் அரசின் தாக்குதல்கள் போன்றவற்றின் பின்புலத்தில் இப்டா தோன்றியது. 1943ல் மும்பையில் கூடிய மாநாடு ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கியது. மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் நாடகங்கள், கலைநிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சாரப் படையாக இந்தியா முழுவதும் கிளைகள் அமைக்க மாநாடு முடிவெடுத்தது.
வங்கப் பஞ்சம்
1943ல் வங்காளப் பஞ்சம் குறித்த ‘நபன்னா’ (அறுவடை) என்ற நாடகம் புகழ்பெற்றது. நபன்னா என்பது வங்காள மக்கள் அறுவடைக் காலத்தில் கொண்டாடும் நாட்டுப்புற விழாவாகும். இது வங்கப் பஞ்சத்தையும், பட்டினிச்சாவுகளையும் கூறி பிரிட்டிஷ் அரசைச் சாடியது. இதை பிஜோன் பட்டாச்சார்யா எழுதி சோம்புமித்ரா இயக்கினார்: “நவ ஜிபோனர் கான்(புது வாழ்வின் பாடல்) எனும் நாடகம் ஜோதிந்திரநாத் மொய்த்ராவால் தயாரிக்கப்பட்டது. கே.ஏ.அப்பாஸ் தயாரித்த “தர்த்தி கி லால் (பூமியின் குழந்தைகள்) என்ற திரைப்படம் வெளிவந்தது. அது நபன்னாவைத் தொடர்ந்து மக்களின் தேவைகளை வலியுறுத்திய சினிமாவாகும். இவை மக்கள் படும் துன்பதுயரங்களை எடுத்துக் காட்டின. மராத்தியில் “தேச சதி” என்ற படம் நாஜி ஜெர்மனியால் சோவியத் யூனியன் தாக்கப்பட்டது குறித்து வெளியானது. தெலுங்கில் “பிராரம்பம், ஜாபேதா ஆகிய படங்கள் மாங்ராஜ் சஹானியால் இயக்கப்பட்டு வெளிவந்தன. இது ஒரு மலபார் பெண்ணைப் பற்றிய கதையாகும். மணிகுண்டலசென் என்ற இடதுசாரி அரசியல் வீரியமுள்ள கோபால் ஹால்தர் நடித்ததாகும். பிற்காலத்தில் அவர் கல்வியாளராய் மலர்ந்தார்.
1947ல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த காங்கிரஸ் அரசு, இப்டா மீது அடக்குமுறைகளையும் போலீஸ் வன்முறையையும் ஏவியது. எனினும் இப்டாவின் பிரதான உறுப்பினர்கள் தங்கள் பாதையை விட்டு விலகாமல் பணிகளைத் தொடர்ந்தனர். பல குழுக்களாக மாறி இயங்கினர். அஹிந்திர சவுத்ரி, சோம்பு மித்ரா, திருப்தி மித்ரா ஆகியோர் தனிகுழு அமைத்து ரக்த சுரபி, தஹார் நசீம் திரஞ்சனா, சார் அத்யாய் (ரவீந்திர நாத் தாகூர் எழுதியது) ஆகிய படங்களை வெளியிட்டனர். உத்பஸ்தத் தலைமையில் தனிக்குழு “டைனர் தலோவார், கஸ்லோவ்” என்ற காவியங்களைப் படைத்தளித்தார். மும்பையில் இருந்த குழு (இப்டா என்ற பெயரிலேயே) பல நாடகங்களை தொடர்ந்து நடத்தி வந்தது. இன்று வரை அறுபதாண்டுகளாக அது தொடர்கிறது.கல்கத்தாவில் நந்திகார், ஸ்பாண்டன் ஆகியோர் தொடர்ந்து நாடகங்களை இயக்கினர்.
நாடு முழுவதும்...
தில்லியில் 1973ல் இப்டா தோழர்கள் “ஜனநாட்டிய மஞ்ச்” என்ற தெரு நாடக இயக்கத்தை துவக்கினர். ரித்விக் கட்டக் “கோமல் காந்தார்” எனும் திரைப்படத்தை வெளியிட்டார். ஆந்திராவில் “பிரஜா நாட்டிய மண்டலி”, கர்நாடகாவில் “சமுதாயா”, தமிழகத்தில் “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்” ஆகியவை பிரபலமாய் செயல்பட்டு வருகின்றன.
மேற்குவங்கத்தில் இப்டாவில் 7000 கலைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். ஹிரண்மாய் தோஷல் தலைவராகவும் கோரா கோஷ் செயலாளராகவும், அசிம் பந்தியோபாத்யாய் துணைச் செயலாளராகவும் உள்ளனர். வெகுஜனப் பாடகரான கங்கர் பட்டாச்சார்ஜி, சங்கர் முகர்ஜி போன்ற பிரபலமான கலைஞர்கள் 1967 முதல் நூற்றுக்கணக்கான நாடகங்களை நடத்தியுள்ளனர். இவற்றில் தெரு நாடகங்களும் உண்டு. இங்கு இப்டா 19 மாவட்டங்களில் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை பட்டறைகள் நடத்தி இளைஞர்களையும் குழந்தைகளையும் இப்டா பயிற்சியளிக்கிறது. இன்றைய சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் இப்டா 1982 முதல் தீவிரமாய் செயல்பட்டு வருகிறது. ஆண்டில் ஐந்து நாட்கள் தேசிய நாடக விழாவை நடத்தி வருகிறது. பட்டறைகள் நடத்தி அனைத்துக் கலைகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 1995 முதல் சிறந்த கலைஞர்களான அருண் பாண்டே, சஞ்சய் உபாத்யாய், சுமன்குமார், கௌதம் மஜும்தார், தேவேந்திரராஜ் அங்குர், ரஞ்சித் கபூர், அகிலேஷ் கன்னா, நீரஜ்வாகல், பிரவீன்குன்ஜன், அஞ்சனாபூரி ஆகியோர் பயிற்சி அளிக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களுக்கும் இக்குழுக்கள் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. குழந்தைகளுக்கான இரு திரைப்படங்களை எடுத்து தேசிய விருது பெற்றுள்ளனர்.
பஞ்சாபில் இப்டா சமூக மாற்றத்திற்கான கலை அரங்குகள் நடத்தி வருகிறது. அங்கு ஷீலா பாட்டியா, பால்ராஜ் சஹானி, பல்வந்த் கார்கி, நிரஞ்சன் சிங், மான் தெராசிங், ஜோகிந்தர் பார்யா, பண்டிட் கலீலி, பிரகாஷ் கவுர், சுரிந்தர் கவுர், அமர்ஜித் குர்தாஸ்பூரி போன்றவர்கள் புகழ்பெற்ற கலைஞர்கள். பஞ்சாபின் நாட்டுப்புறக் கலைகளுக்கும், பாடல்களுக்கும் புத்துயிர் அளித்தனர். அசாமில் 1947 முதல் இப்டா இயங்கி வருகிறது. ஹிமாங்கோ பிஸ்வாஸ் அமைப்பாளராய் இருந்து அசாமின் புகழ்பெற்ற கலைஞர்களை உறுப்பினர்களாக்கினார். ஜோதிர் பிரசாத் அகர்வாலா, விஷ்ணு பிரசாத் ராபா, டாக்டர் பூபன் ஹசாரிகா போன்றவர்கள் இப்டாவில் இணைந்தனர். 1952 முதல் 1962 வரை இப்டா மக்களிடம் முத்திரை பதித்தது. 1955ல் அசாமிய மூன்றாவது மாநாடு நடைபெற்றது. அதில் சினிமாவில் புகழ்பெற்ற பால்ராஜ் சஹானி, சலீல் சவுத்ரி, ஹேமந்த் முகர்ஜி கலந்து சிறப்பித்தனர். சத்கதி, துர்தேஷர் கதா, கியோ, அர்ஜுன், தோலிர் துமுகர், லால்அர்ணி, காபிஹவுஸ் போன்ற நாடகங்கள் புகழ்பெற்றவை.