புதுதில்லி:
விவசாயப் பொருளாதாரத்தை பாதிக்கும்மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் (Regional Comprehensive Economic Pact) மத்திய பாஜக அரசு கையெழுத்திட முடிவு செய்திருப்பதற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில்வரும் நவம்பர் 4 அன்று கண்டனம் முழங்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசாங்கம், மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் (Regional Comprehensive Economic Pact) கையெழுத்திட, முடிவுசெய்துள்ளது. இது சிறுகுறு விவசாயிகளையும், தொழிலாளர் வர்க்கத்தையும் கடுமையாகப் பாதித்திடும். இதன் உறுப்பு நாடாக இந்தியா மாறுமானால், நாட்டின்வேளாண்மையும், உள்நாட்டுப் பொருளாதாரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்தியச்சந்தைகளில் இதர நாடுகளிலிருந்து மலிவுப் பொருள்கள் வந்து குவிந்துவிடும். இதனால்நம் நாட்டில் உற்பத்தியாகும் விளைபொருள்கள் மற்றும் உற்பத்திப் பொருள்கள் விற்பனையாகாமல் அவற்றை உற்பத்தி செய்த விவசாயிகளுக்குக் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும். கால்நடைப் பண்ணைத் தொழில் மிகவும் மோசமான அளவில் பாதிப்புக்கு உள்ளாகும்.
நவீன தாராளமயக் கொள்கைகள், உலகம் முழுதும் நாசத்தை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இவற்றின் காரணமாகஇந்தியப் பொருளாதாரத்திலும், உலகப் பொருளாதாரத்திலும் பொருளாதார மந்தம் உக்கிரமடைந்துள்ளது. எனினும், மோடி அரசாங்கம், இவற்றிலிருந்து படிப்பினையைப் பெற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் இதே கொள்கைகளைப் பின்பற்றுகிறது, கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் நிவாரணத்தையும் அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது என்பது, ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கத்தின் தொழிலாளிகள் விரோத, விவசாயிகள் விரோதக் கொள்கைகளின் ஒரு பகுதியாகும்.
பால் உற்பத்தி விவசாயிகள் வாழ்க்கை நாசமாகும்
தற்போது நாட்டில் கால்நடைப் பண்ணைகள் மூலமாக பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பால் விற்பனை விலைகள் மூலம் கிடைத்திடும் வருமானத்தில் 71 சதவீதம் சென்றுகொண்டிருக்கிறது. இந்தஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுவிட்டால் பாலின் விலை வீழ்ச்சியடையும். பால் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் வாழ்க்கை நாசமாகும். அரசின் இந்த முடிவிற்கு எதிராக விவசாயிகளும், தொழிலாளர் வர்க்கமும் கிளர்ந்தெழவேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறும் விதத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், ஆர்ப்பாட்டங்கள், கொடும்பாவி எரிப்புப் போராட்டங்கள், கிராமங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துதல் முதலானவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுக்கிறது.இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு நவம்பர் 4அன்று கையெழுத்திட இருக்கிறது. அன்றையதினம் இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் கண்டன எதிர்ப்பு இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போராட்ட வடிவங்கள் இதர அமைப்புகளுடன் கலந்து பேசி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.