அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் உள்ள மாதா திரிபுரேஸ்வரி கோவில் பிரசித்திபெற்றது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆடு பலியிடப்படுவது வழக்கம். இதற்கான நிதியை மாநிலஅரசு அளித்து வந்தது.இந்நிலையில், திரிபுரேஸ்வரி கோயிலில் ஆடு பலியிடப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, அதன்மீதான விசாரணையில் திரிபுரா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.நாடு விடுதலை அடைவதற்கு முன்பு, மன்னர் காலத்திலிருந்தே இக்கோயிலில் ஆடு பலியிடும் நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், ‘வீட்டுவிலங்கு தியாகம்’ என்பது வழிபாட்டின் ஒரு அங்கம் என்றும் அரசாங்கத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்த விதிமுறைகள், நிபந்தனைகள்படி, பலியிடுவதை நிறுத்த முடியாது; அதற்கான நிதியையும் திரிபுரா அரசு வழங்கியாக வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தலைமைநீதிபதி சஞ்சய்கரோல் மற்றும் நீதிபதி அரிந்தம் லோத் ஆகியோர் அடங்கியஅமர்வு வெள்ளிக்கிழமையன்று 72 பக்கம் அடங்கிய தங்களின் தீர்ப்பைவழங்கினர்.அதில், திரிபுரேஸ்வரி கோயில் மட்டுமன்றி, திரிபுரா மாநிலம் முழுவதுமே கோயில்களில் ஆடு பலியிடுவதற்குத் தடை விதித்த நீதிபதிகள்,“கோவில்களில் விலங்குகளை படுகொலை செய்வதை தடை செய்யும் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.