tamilnadu

img

நான் கருணை காட்டச் சொல்லவில்லை; மன்னிப்பு கேட்கப் போவதும் இல்லை... நீதிபதிகளை விமர்சித்ததற்காக தண்டனையை ஏற்கத் தயார்...

புதுதில்லி:
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதான விமர்சனத்திற்காக மன்னிப்பு கேட்கப் போவது இல்லை; இதற்காக என்ன தண்டனை அளித்தாலும் ஏற்கத் தயார் என்று மூத்தவழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டநிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கான தண்டனை அறிவிப்பை 2 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த ஜூன் 27 அன்று டுவிட்டரில் சில கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார். அதில்,கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்ச நீதிமன்றம் கையாண்ட விதம், பீமா கோரேகான் வழக்கில்கைதாகியுள்ள சமூக செயற்பாட்டாளர் கள் வரவர ராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதது;நீதிமன்றம் அதனைக் கண்டிக்காமல் கடந்து சென்றது ஆகியவற்றை கேள்விக்கு உட் படுத்தி இருந்தார்.

மேலும், “வரலாற்று அறிஞர்கள் எதிர் காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, ஜனநாயகத்தை அழிப்பதில் உச்ச நீதிமன்றத் தின் பங்கு என்ன என்பதையும், அதிலும் குறிப்பாக 4 முன்னாள் தலைமை நீதிபதிகளின் (எஸ்.ஏ. பாப்டே, ரஞ்சன் கோகோய்,தீபக் மிஸ்ரா, ஜே.எஸ். கேஹர்..) பங்குகுறித்து தெரியவரும்” என குறிப்பிட்டிருந்தார்.இதற்காக பிரசாந்த் பூஷண் மீது தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை விரைவாக நடத்தி,கடந்த ஆகஸ்ட் 14 அன்று பிரசாந்த் பூஷண்குற்றவாளி என்று தீர்ப்பும் வழங்கியது. தண்டனை விவரத்தை மட்டும் ஆகஸ்ட் 20- அன்று அறிவிப்பதாக கூறியிருந்தது.

அதன்படி, வியாழனன்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ணாமுராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு,வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது பேசிய நீதிபதி அருண் மிஸ்ரா: இந்த பூமிப்பந்தில் தவறு செய்யாதமனிதர்கள் யாருமே இருக்க முடியாது; நீங்கள் 100 நல்லது செய்திருக்கலாம்.அதற்காக 10 குற்றங்களை செய்வதற்குலைசென்ஸ் கொடுத்துவிட முடியாது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு விமர்சனத்துக்காக வருத்தப்பட வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த பிரசாந்த் பூஷண், “நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு எனக்குமிகுந்த வேதனையைத் தருகிறது. தண்டனை வழங்கப்படும் என்பதற்காக வருத்தப்படவில்லை. என்னுடைய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுதான் வருத்தம். அவமதிப்பு வழக்கில் அறிவிக்கையின் நகல் என்னிடம் வழங்க வேண்டியது அவசியம் என்பதைக் கூட நீதிமன்றம் அறியவில்லை என்பது, எனக்கு வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

ஜனநாயகத்தையும் அதன் விழுமியங்களையும் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனங்கள் அவசியமானவை என்று கருதுகிறேன். ஒரு நிறுவனத்தை செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்னுடைய ட்விட்டர் பதிவுகள் பதிவிடப்பட்டன. ஆனால், ஆக்கப்பூர்வமான விமர்சனம்மற்றும் தீங்கிழைக்கும் அறிக்கை ஆகியவற்றை வேறுபடுத்த நீதிமன்றத்தின் தீர்ப்புதவறிவிட்டது. எனது நோக்கத்திற்கான எந்தவித சரியான ஆதாரங்களையும் சமர்பிக்காமல் நீதிமன்றம் என்மீது இப்படியொரு தாக்குதலை தொடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 

இப்போதும், எனது நிலைப்பாட்டில் நான் தெளிவாக இருக்கிறேன். நான்உங்களிடம் கருணையைக் கேட்கவில்லை,பெருந்தன்மையைக் கோரவில்லை. நீதிபதிகள் குறித்து பதிவிட்ட இரண்டு பதிவுகளுக்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.எனக்கு நீதிமன்றம் எந்த தண்டனை விதித்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன் என்று பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.இதையடுத்து, பிரசாந்த் பூஷன் பேசும்தொனி, பேச்சு, உள்ளடக்கம் ஆகியவை பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், அவர் தவறைஉணர்ந்து விட்டதாக அறிவித்தால் அனைத்தும் எளிதாக முடிந்துவிடும் என்றனர்.

அத்துடன், இன்னும் 2 நாட்கள் அவகாசம் தருகிறோம். அவமதிப்பு கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க மறுக்கும் அவரின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்தனர்.அப்போது, நீதிபதிகள் விரும்பினால் என்னுடைய விமர்சனத்தை திரும்பப் பெறுகிறேன். ஆனால் என்னுடைய நிலைப்பாட் டில் பெரியளவிற்கு எந்த மாற்றமும் இருக்காது. நீதிபதிகளின் நேரத்தை வீணாக்கவும் நான் விரும்பவில்லை என்று தெரிவித்த பிரசாந்த் பூஷண், எனினும், நான் என்னுடைய வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி விட்டு தெரிவிக்கிறேன் என்றார். இறுதியாக கூறிய நீதிபதி அருண்மிஸ்ரா, உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்வதுதான் சரியாக இருக்கும். சட்டம்சார்ந்த மூளையை மட்டுமே பயன்படுத்தாதீர்கள் என்று பூஷணைக் கேட்டுக் கொண்டார்.