புதுதில்லி:
மனித உரிமைகள் மீதான மத்திய பாஜக அரசின் தாக்குதலுக்கு எதிராகப் போராட சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் உறுதி ஏற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 11 செவ்வாய்க் கிழமையன்று, மனித உரிமைகள் மீது மத்திய பாஜக அரசாங்கம் கடும் தாக்குதல்கள் தொடுத்திருப்பதற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு சார்பாக தர்ணா போராட்டம் நாடாளுமன்ற வீதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும்போதே பிரகாஷ் காரத் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
அரசியல் சட்டவிரோதம்
பாஜக அரசாங்கம் கடந்த நான்கு மாதங்களாக காஷ்மீர் மக்களின் அனைத்துக் குடிமை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதும் கடும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. மேலும் ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறா மக்களை மதஅடிப்படையில் பிளவுபடுத்திடவும் முயற்சி களை மேற்கொண்டு வருகிறது.மத்திய அரசு கொண்டுவரும் குடியுரிமை(திருத்தச்) சட்டமுன்வடிவு, மதத்தின் அடிப் படையில் குடியுரிமையை தீர்மானித்திடும் விதத்தில் மாற்றியமைக்கப்பட இருக்கிறது. இதன்படி அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக வந்துள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிற அதேசம யத்தில், முஸ்லிம்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். நம் அரசமைப்புச் சட்டமானது எவரொருவருக்கும் மதத்தின் அடிப்படையிலோ, சாதியின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ அல்லதுபிராந்தியத்தின் அடிப்படையிலோ பாகுபாடு காட்டப்படுவதைத் தடை செய்கிறது.
இதன்மூலம் ஆட்சியாளர்கள் நாட்டிலுள்ள மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறி விடவேண்டும் என்பதைக் குறியாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம் நாட்டில் தற்போது தீவிரமாக நிலவும் பிரச்சனைகளான வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, கல்விக்கு அரசாங்கம் செய்திடும் செலவினத்தில் வெட்டினை ஏற்படுத்தி இருப்பது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச்சட்டங் களாக மாற்றியமைத்திருப்பது, தொழிற்சங்க உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்திருப்பது ஆகியவற்றுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இத்தகு இழிசெயல்களில் இறங்கியிருக்கிறது. இத்தகைய மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக உறுதியுடன் எதிர்த்துப்போராட சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று உறுதி ஏற்போம்.இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.போராட்டத்திற்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.எம். திவாரி தலைமை வகித்தார்.(ந.நி.)